எடப்பாடி, ஓமலூர், இளம்பிள்ளை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம்


எடப்பாடி, ஓமலூர், இளம்பிள்ளை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2019 10:30 PM GMT (Updated: 19 Jan 2019 5:02 PM GMT)

எடப்பாடி, ஓமலூர், இளம்பிள்ளை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நடந்தது.

சேலம்,

எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி சின்ன மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நடைபெறும். இதில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் எருதுகளை அழைத்து வந்து கோவிலின் முன்பு நிறுத்துவார்கள். பூசாரிகள் எருதுகளுக்கு திருநீறு இடுவார்கள். பின்னர் கோவிலை சுற்றி வலம் வந்தவுடன் எருதாட்டம் நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டும் எருதாட்டம் நடந்தது. இதையொட்டி கவுண்டம்பட்டி பிரிவுரோடு செல்லியாண்டியம்மன் கோவில் திடலில் இருந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எருதுகளை கோவிலுக்கு கொண்டு வந்து எதிரில் உள்ள மைதானத்தில் விட்டு எருதாட்டம் நடத்தினர்.

எருதுகள் முன்பு இளைஞர்கள் நீண்ட கம்புகளின் நுனியில் பொம்மையை கட்டிவிட்டு எருது முன்பு ஆட்டினர். அதனை கண்ட எருதுகள் துள்ளிக்குதித்து ஓடியது. அதனை இளைஞர்கள் துரத்தி பிடித்தனர். இந்த எருதாட்ட நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளானவர்கள் வந்திருந்தனர்.

எடப்பாடி அருகே உள்ள வேம்பனேரி அய்யனாரப்பன் கோவிலில் காணும் பொங்கலையொட்டி எருதாட்டம் நடைபெற்றது. இதையொட்டி வேம்பனேரி, புதுப்பாளையம், சமுத்திரம் சுற்றுவட்டாரபகுதியில் உள்ள ஊர் பெரியவர்கள் எருதுகளை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அய்யனாரப்பன் கோவிலுக்கு கொண்டுவந்து நிறுத்தினர். கோவில் பூசாரி எருதுகளுக்கு திருநீறு போட்டவுடன் எருதாட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. இதையொட்டி கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எருதாட்டத்தை காண ஆயிரக்கணக்கானோர் கோவிலின் முன்பு திரண்டு இருந்தனர். பின்னர் அவர்கள் அய்யனாரப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல கொங்கணாபுரத்தை அடுத்த புதுப்பாளையம் பெரியமாரியம்மன் கோவிலில் காணும் பொங்கலையொட்டி எருதாட்டம் நடந்தது. இதனை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

ஓமலூரை அடுத்த கருப்பணம்பட்டியில் மாட்டு பொங்கலையொட்டி எருதாட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட எருதுகளை ஓடவிட்டு எருதாட்டம் நடத்தினர். இதில் அக்கம் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து எருதாட்டத்தை பார்த்து ரசித்தனர்.

இதே போல காணும் பொங்கலையொட்டி ஓமலூரை அடுத்த எம்.செட்டிபட்டி, பெரியேரிபட்டி, அமரகுந்தி உள்ளிட்ட இடங்களில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு எருதாட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கோவிலில் வைத்து எருதுகளுக்கு பூஜை செய்து கயிற்றை கட்டி கோவில் மற்றும் ஊரை சுற்றி வலம் வந்தனர். இந்த எருதாட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட எருதுகளை வைத்து எருதாட்டம் நடத்தினர். இதே போல தொளசம்பட்டி அருகே உள்ள ரெட்டிப்பட்டி புடவைகாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த எருதாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதே போல தும்பிபாடி வரக்கப்பிள்ளையூர் மாரியம்மன் கோவில் வளாகத்திலும் எருதாட்டம் நடைபெற்றது.

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் எருதாட்டம் நடந்தது. முன்னதாக அந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து அங்குள்ள மாரியம்மன் கோவிலில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் நடந்த எருதாட்டத்தில் 200 காளைகள் பங்கேற்றன. இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு காளைகளை பிடித்தனர்.

இளம்பிள்ளை அருகே சின்னப்பம்பட்டியை அடுத்துள்ள தெசவிளக்கு கிராமம் சின்னபிள்ளையூரில் உள்ள விநாயகர் கோவிலில் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் எருதாட்டம் நடத்தப்படும். அந்த வகையில் இங்கு எருதாட்டம் நடந்தது. இதில் பங்கேற்க எலமகவுண்டனூர், சின்னபிள்ளையூர், கொண்டக்காரனூர், பனஞ்சாரி முனியப்பன் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரிக்கப்பட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.

சின்னபிள்ளையூர் கோவிலில் அந்த காளைகளுக்கு சந்தனம் வைத்தும், மாலை அணிவித்தும் பூசாரி பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து கோவில் முன்பு ஒருவர் பொம்மையை எருதுகள் முன்பு காட்ட அதை காளைகள் முட்டி தள்ளி சீறிப்பாய்ந்தன. அவற்றை இருபுறமும் கயிறு மூலம் பிடித்து ஆட்டி இளைஞர்கள் உற்சாகமாக விளையாடினார்கள்.

இந்த எருதாட்டத்தை காண சின்னப்பம்பட்டி, மாட்டையாம்பட்டி, எலமகவுண்டனூர், கொண்டக்காரனூர், பனஞ்சாரி முனியப்பன் கோவில், சூரன்வளவு, தொப்பம்பட்டி, மேட்டுபாளையம், முனியம்பட்டி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் திரளாக வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story