கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்


கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 20 Jan 2019 4:15 AM IST (Updated: 20 Jan 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓட, ஓட விரட்டி 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொன்றது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ம.பொ.சி நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 17). பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். இவருடைய நண்பர்கள் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை சேர்ந்த விமல் (23), சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சதீஷ் (24).

ஆகாஷ், விமல், சதீஷ் ஆகியோர் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு 8 பேர் கொண்ட கும்பல் வந்தது.

அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால்திடீரென ஆகாஷ் உள்பட 3 பேரையும் வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் அங்கிருந்து வெட்டு காயங்களுடன் தப்பி ஓடினர்.

எனினும் அந்த கும்பல் விரட்டி சென்று 3 பேரையும் அடுத்தடுத்து கொடூரமாக வெட்டி கொன்றது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இதை கண்ட அப்பகுதி மக்கள் பயத்தில் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். கடைகளையும் சிலர் அவசர அவசரமாக அடைத்தனர்.

இது பற்றி அறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் ஆகாஷ் உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி இருக்கிறதா? எனவும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story