சிறுமியின் இருதய வால்வு வீக்கத்தை சரிசெய்ய சவால் நிறைந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு சாதனை


சிறுமியின் இருதய வால்வு வீக்கத்தை சரிசெய்ய சவால் நிறைந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு சாதனை
x
தினத்தந்தி 20 Jan 2019 4:30 AM IST (Updated: 20 Jan 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் சிறுமியின் இருதய வால்வில் ஏற்பட்டிருந்த வீக்கத்தை சரிசெய்ய சவால் நிறைந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் குழு சாதனை படைத்துள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜன். அவருடைய மகள் மதுமிதா (வயது 13). இவளுக்கு நீண்ட நாட்களாக காய்ச்சல், இருமல், மூச்சுத்திறணல் போன்ற பிரச்சினைகள் இருந்தன. சாத்தூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை.

இதனை தொடர்ந்து மதுமிதாவை பரிசோதனை செய்து பார்த்தபோது, இருதய வால்வில் பாதிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் வீக்கம் இருந்தது தெரியவந்தது. அறுவை சிசிச்சை மூலம் வீக்கத்தை அகற்றினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனையில் இதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் பல லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், கடந்த நவம்பர் மாதம் 20–ந் தேதி சிறுமியை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சேர்த்தனர்.

இதனை தொடர்ந்து அந்த சிறுமிக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், அதே நேரத்தில் மிகவும் நுட்பமான முறையில் இதய வால்வில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வீக்கத்தை சரிசெய்யலாம் என டாக்டர்கள் குழுவினர் முடிவெடுத்தனர்.

அதன்படி அந்த சிறுமிக்கு சவால் நிறைந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது தற்போது, சிறுமி மதுமிதா பூரண நலம் பெற்றுள்ளாள். அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி டீன் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது–

சிறுமிக்கு பிறவியிலேயே இந்த வீக்கம் இருந்துள்ளது. மிகச்சிறிய அளவில் இருந்த இந்த வீக்கம் நாளடைவில் பெரிதாகி ஆரஞ்சு பழ அளவிற்கு மாறி இதய வால்வில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வீக்கத்தை ‘சப்மிட்ரல் லெப்ட் வெண்டிரிக்கள் அனுரிசம்‘ என்று ஆங்கிலத்தில் அழைப்பர். அரிதான இந்த நோய் கடந்த 100 ஆண்டுகளில் 120 பேருக்கு மட்டுமே வந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இருதய வால்வு பகுதியில் இதுபோன்ற வீக்கம் இருந்தால் மூச்சுவிடுவதற்கு சிக்கல் வரும். மேலும் அந்த வீக்கம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் தன்மை உடையது. அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளோம். அறுவை சிகிச்சைகள் நடக்கும் சமயத்தில் மாற்று உபகரணங்களை உதவியுடன், இதருய துடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படி நிறுத்தி வைத்தால் தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் சிறுமியின் உயிருக்கு ஆபத்து நேராத வகையில் தக்க மருத்துவ முறைகளும் பின்பற்றப்பட்டன. தற்போது சிறுமி ஆரோக்கியமாக இருக்கிறாள். அவளுக்கு இதுபோன்ற பிரச்சினை இனி ஏற்படாது.

தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், அரசு ஆஸ்பத்திரியில் அனைத்தும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இதுபோன்ற அறுவை சிகிச்சை எந்த ஆஸ்பத்திரியிலும் மேற்கொள்ளவில்லை. இதுவே முதல் முறை.

இந்த அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்த மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பாலசுப்பிரமணியன், ரத்தினவேல், பாப்பையா, மீனாட்சி சுந்தரம், சிவக்குமார், கல்யாணசுந்தரம், முத்துகுமார், கற்பகவல்லி உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story