விருதுநகர் மாவட்டத்தில் 24 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்


விருதுநகர் மாவட்டத்தில் 24 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2019 4:30 AM IST (Updated: 20 Jan 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 24 இடங்களில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.

விருதுநகர்,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்ய முடியாமல் ஆலைகளை மூடும் நிலை ஏற்பட்டது.

பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தாமல் 40 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய போதிலும், பட்டாசு உற்பத்தியாளர்கள் அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்து விட்டனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 22–ந்தேதி நடைபெற உள்ளது.

பல்வேறு தொழிற்சங்கத்தினரும் அரசியல் கட்சியினரும் பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் சி.ஐ.டி.யூ. சார்பு பட்டாசு தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து நேற்று விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன. மீனம்பட்டி, சிவகாமிபுரம் காலனி, செல்லையநாயக்கன்பட்டி, முருகன்காலனி, விஸ்வநத்தம், மாரனேரி, துரைச்சாமிபுரம், வெம்பக்கோட்டை, துலுக்கன்குறிச்சி, வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம், மீனாட்சிபுரம், சல்வார்பட்டி, ராமலிங்காபுரம், அன்பின்நகரம், மார்க்கநாதபுரம், பனையேரிபட்டி, நாச்சியார்பட்டி, சாத்தூர் வெங்கடாசலபுரத்தில், கன்னிசேரிபுதூர், வாடியூர், ஓ.கோவில்பட்டி, சேர்வைகாரன்பட்டி, கூமாபட்டி ஆகிய 24 இடங்களில் கஞ்சித்தொட்டிகளை திறந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரியும் பாதிப்படைந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் நடந்த இந்த போராட்டத்தில் 700 பெண்கள் உள்பட 1,050 பேர் கலந்து கொண்டனர்.


Next Story