நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது திருச்சியில் டி.டி.வி. தினகரன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது திருச்சியில் டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2019 11:00 PM GMT (Updated: 19 Jan 2019 11:54 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி திருவானைக்காவலில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

டெல்லிக்கு தமிழக அரசு அடிமையாக இருந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பா.ஜ.க.வுடன் சென்றால் தமிழகத்தில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது, வெற்றி பெற முடியாது என அ.தி.மு.க.வில் தம்பிதுரை உள்பட ஒவ்வொருவரும் பேசி வருகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வை பற்றி விமர்சிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார். ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எங்களது (அ.ம.மு.க.) 17 எம்.எல்.ஏ.க்களிடம் மேல்முறையீடு செல்லுங்கள் என அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழக மக்கள் தேர்தலுக்காக தயாராக இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தகவல் உள்ளது. அ.தி.மு.க. யாரோடு கூட்டணி வைத்தாலும் தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது. அவர்களோடு சேருகிற எந்த கட்சிக்கும் டெபாசிட் கிடைக்காது. இந்த ஆளும் கட்சியின் செயல்பாடுகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

தேர்தலில் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும், வாக்காளர்களுக்கு எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அவர்களால் (அ.தி.மு.க.) டெபாசிட் கூட வாங்க முடியாது.

தி.மு.க.- பா.ஜ.க. இடையே ரகசிய உறவு இருப்பது உண்மை தான். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் தேர்தலுக்கு பின் தி.மு.க. அணி மாறலாம். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நடத்தவிடாமல் மு.க.ஸ்டாலின் செய்துவிட்டார்.

கோடநாடு சம்பவத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதற்காக பதறுகிறார். இதனால் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. எந்த உண்மையும் வெளியே வந்துதான் ஆக வேண்டும். தமிழ்நாடு காவல்துறையோ, சி.பி.ஐ.யோ, யார் வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து டி.டி.வி.தினகரனிடம், அ.ம.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் தனித்து அல்லது கூட்டணியுடன் போட்டியிடுமா? என நிருபர்கள் கேட்டபோது அவர் பதில் அளிக்கையில், “அ.ம.மு.க. எந்த தேசிய கட்சியுடனும் கூட்டணி வைக்காது. அ.ம.மு.க.விற்கு தமிழக மக்களிடம் ஆதரவு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வெற்றிபெறும். தேர்தலில் கூட்டணிக்காக சில மாநில கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எங்களுக்கு முழுமையாக ஒத்துழைத்தால் கூட்டணி வைப்போம். அ.ம.மு.க. தலைமையில் கூட்டணி அமையும்” என்றார்.

அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு, மாநில கட்சிகள் என்றால் தே.மு.தி.க., பா.ம.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணியா? என கேட்டபோது, தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிற நிலையில் கட்சியின் பெயர்களை தெரிவிப்பது நாகரிகம் அல்ல. கூட்டணி அமைத்ததும் அறிவிக்கப்படும். இல்லையென்றால் ஜெயலலிதா வழியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம்” என்றார்.

முன்னதாக திருவானைக்காவல் டிரங் ரோட்டில் திருச்சி வடக்கு மாவட்ட அ.ம.மு.க. அலுவலகத்தை டி.டி.வி. தினகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். அப்போது அமைப்பு செயலாளரும், வடக்கு மாவட்ட செயலாளருமான மனோகரன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன் (மாநகர்), ராஜ சேகரன் (தெற்கு), மண்டல செயலாளர் ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story