பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய கல்லூரி மாணவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய கல்லூரி மாணவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பெருந்துறை,
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகன் திவாகர் (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தார். நேற்று காலை 9 மணி அளவில் திவாகர் மற்றும் நண்பர்கள் 8 பேருடன் பெருந்துறை அருகே உள்ள சூளக்காட்டான்வலசு பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.
அப்போது அவர்கள் அனைவரும் வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். இதில் திவாகர் வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் மூழ்கியதோடு, தண்ணீர் இழுத்துச்சென்றது.
இதனை கவனித்த நண்பர்கள், திவாகரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்–இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வாய்க்காலில் அடித்துச்செல்லப்பட்ட திவாகரை தேடினார்கள். மேலும் பவானியில் இருந்து மீனவர்களும் திவாகரை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திவாகரை தேடும் பணி நடைபெறும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.