செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:00 AM IST (Updated: 21 Jan 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செங்கோட்டை,

நெல்லை மாவட்டம் செங்கோட்டை குலசேகரநாத சுவாமி, தர்மசம்வர்த்தினி அம்பாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், இரவில் சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலாவும் நடந்தது.

மேலும் கோவிலில் ஒவ்வொரு நாளும் சமய சொற்பொழிவு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனையுடன் தேரோட்டம் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ரதவீதிகள் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது.

விழா ஏற்பாடுகளை சுசீந்திரம் கோவில் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரத்தினவேலு, கோவில் ஸ்ரீகாரியம் கெங்கமுத்து மற்றும் தைப்பூச திருவிழா மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று (திங்கட்கிழமை) சுவாமி, அம்பாள் பல்லக்கில் ஆராட்டு நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. 


Next Story