சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீர் விளைநிலத்திற்குள் புகுவதால் பயிர்கள் அழுகும் அபாயம்


சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீர் விளைநிலத்திற்குள் புகுவதால் பயிர்கள் அழுகும் அபாயம்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:30 AM IST (Updated: 21 Jan 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியில் இருந்து வீணாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் விளைநிலத்திற்குள் புகும் நீரில் பயிர்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சேத்தியாத்தோப்பு,

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம். இது தவிர பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஓடைகள் வழியாகவும் மழைக்காலங்களில் தண்ணீர் வருவதுண்டு.

ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியாகும். இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வரும் நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உள்ளது.

நேற்று வடவாறு வழியாக வினாடிக்கு 700 கனஅடி நீர் ஏரிக்கு வந்து கொண்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கனஅடி நீரும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். வழியாக வினாடிக்கு 330 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வானமாதேவி பகுதியில் இருந்து மழைநீர் வீராணம் ஏரிக்கு வரும் விதமாக ஓடை ஒன்று உள்ளது. இதில் இருந்து ஏரியின் உள்ளே தண்ணீர் செல்வதற்காக 10 குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி இருப்பதால், இந்த குழாய்கள் வழியாகவும், அதற்கு மேலே சிமெண்ட் தளத்தை கடந்தும் ஏரியில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் வீணாக ஓடையில் பாய்ந்தோடுகிறது.

அதிகப்படியான நீர் செல்வதால், ஓடை தாக்குப்பிடிக்க முடியாமல் நிரம்பி, அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்து வரும் சம்பா நெற்பயிர்கள் மற்றும் உளுந்து பயிர்கள் தண்ணீரின் உள்ளே மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, வழக்கமாக ஏரி நிரம்பும் நேரத்தில் இதுபோன்று ஓடையின் வழியாக தண்ணீர் வெளியேறும். தற்போதும் அதேபோன்று தான் உள்ளது. அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தண்ணீர் வெளியேறுவது தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியின் பாசன மதகு ஒன்றில் உடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், உடைப்பை சரி செய்தனர். இந்த நிலையில் அதேபோன்று ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருவது விவசாயிகளை கவலையடைய செய்து இருக்கிறது.

எனவே இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிபகுதியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, இதுபோன்ற பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story