பொள்ளாச்சியில் மனைவியின் கள்ளக்காதலனை குத்திக்கொன்ற டிரைவர் கைது


பொள்ளாச்சியில் மனைவியின் கள்ளக்காதலனை குத்திக்கொன்ற டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2019 11:30 PM GMT (Updated: 20 Jan 2019 6:55 PM GMT)

பொள்ளாச்சியில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திக்கொன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் மணி என்கிற குண்டு மணி (வயது 37), பைனான்சியர். இவருக்கும் குள்ளக்காபாளையத்தை சேர்ந்த டிரைவர் குணசேகரன் என்பவரது மனைவி மணிமேகலைக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனை அறிந்த குணசேகரன் தனது மனைவியை கண்டித்தார். ஆனால், இதனை பொருட்படுத்தாமல் மணிமேகலை கள்ளக்காதலை தொடர்ந்ததால் கணவனும், மனைவியும் சமீபத்தில் பிரிந்தனர். இதன் பின் மணிமேகலை புளியம்பட்டியில் கலைஞர் நகரில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 17–ந் தேதி இரவு கலைஞர் நகர் வீட்டில் மணிமேகலையும், மணியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த குணசேகரன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மணியை குத்தி கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியரை கத்தியால் குத்தி கொலை செய்த குணசேகரனை பிடிக்க பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் (பொறுப்பு) தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், பொள்ளாச்சி ஜீவா நகர் பஸ் நிறுத்தம் அருகே பதுங்கி இருந்த குணசேகரனை போலீசார் கைது செய்தனர். பைனான்சியரை கொலை செய்தது குறித்து குணசேகரன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

கடந்த 2010–ம் ஆண்டு நிலம் ஒன்று வாங்குவது தொடர்பாக எனக்கும் மணிமேகலைக்கும் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியது. மணிமேகலையை 2011–ம் ஆண்டு கிணத்துக்கடவில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். நான் டிரைவராக உள்ளதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவேன்.

இந்தநிலையில், எனது மனைவி, மணியிடம் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதனை வசூலிக்க மணி வரும்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த நான் எனது மனைவியை கண்டித்து புத்திமதி கூறினேன். மேலும், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க 3 முறை வீடு மாற்றி விட்டேன். இருப்பினும், அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்ந்ததால் நான் என் மனைவியிடம் இருவரும் பிரிந்து விடுவோம் என கூறினேன். அவளும் சரி என கூறி விட்டாள்.

இதையடுத்து, சமீபகாலமாக நாங்கள் பிரிந்து இருந்தோம். இந்தநிலையில், மணிமேகலை தன்னுடைய படிப்பு சான்றிதழ்களை கேட்டாள். அதனை கொடுக்க சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் நான் அங்கு சென்றபோது எனது மனைவியும், மணியும் வீட்டை உள்புறமாக பூட்டி உல்லாசமாக இருந்தனர். மணியால் எனது குடும்பம் சீரழிந்ததை கண்டு மனம் நொந்த நான் அவரை ஆத்திரத்தில் ஆவேசமாக கழுத்து உள்பட 3 இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினேன். பின், வால்பாறை வழியாக கேரளாவிற்கு தப்பி சென்றேன். இன்று (நேற்று) என் குழந்தைகளை சேரன் நகரில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்து பார்க்க வந்தேன். இதனை அறிந்த போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story