பா.ஜ.க. மேலிடம் அவசர அழைப்பு: சாமிநாதன் எம்.எல்.ஏ. திடீர் டெல்லி பயணம்


பா.ஜ.க. மேலிடம் அவசர அழைப்பு: சாமிநாதன் எம்.எல்.ஏ. திடீர் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:00 AM IST (Updated: 21 Jan 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

கட்சி மேலிடத்தின் அவசர அழைப்பினை தொடர்ந்து மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

புதுச்சேரி,

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான வியூகங்களை வகுக்க களம் இறங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கிறது.

ஆனால் பாரதீய ஜனதா எந்த கட்சியுடன் கூட்டணி என்பது முடிவாகவில்லை. புதுவையை பொறுத்தவரை மாநில கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. விரும்புகிறது.

ஆனால் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் தயக்கம் காட்டுகின்றன. தென்மாநிலங்களில் செல்வாக்கு இல்லாத பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறமுடியாமல் போகலாம் என்ற அச்சம் தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு ஒத்துவராதபட்சத்தில் தனித்து விடப்படும் நிலையில் பாரதீய ஜனதா உள்ளது. இந்தநிலையில் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்தை அறிய பா.ஜ. மேலிடம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக விவாதிக்க உடனடியாக டெல்லி வருமாறு புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ.வுக்கு கட்சி மேலிடம் அவசர அழைப்பு விடுத்தது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று டெல்லிக்கு சென்றார். அங்கு கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். அப்போது புதுவையில் கூட்டணி அமைப்பது குறித்து அவர்கள் கருத்துக்களை பரிமாற உள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. அதே நேரத்தில் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பாரதீய ஜனதாவும் தாமாக முன்வந்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story