முதல் திருமணத்தை மறைத்து ஆசிரியையை 2-வதாக மணந்த வாலிபர்


முதல் திருமணத்தை மறைத்து ஆசிரியையை 2-வதாக மணந்த வாலிபர்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:45 AM IST (Updated: 21 Jan 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரில் நடந்த முதல் திருமணத்தை மறைத்து ஆசிரியையை 2-வதாக மணம் முடித்தார் பெருகவாழ்ந்தானை சேர்ந்த வாலிபர். அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மலேசியாவை சேர்ந்த முதல் மனைவி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெருகவாழ்ந்தானை சேர்ந்தவர் முத்துக்கண்ணு. இவருடைய மகன் ராஜ்குமார்(வயது 29). இவர், சிங்கப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு நர்சாக வேலை பார்த்து வந்த மலேசியாவை சேர்ந்த துர்காதேவியுடன்(28) பழக்கம் ஏற்பட்டது. அது பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தில் அங்கேயே திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் அங்கு முறைப்படி பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ராஜ்குமார் தனது மனைவியிடம், தான் சொந்த ஊருக்கு சென்று விட்டு வருவதாக கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த மனைவியிடம் விடைபெற்று கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து ராஜ்குமார் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இங்கு வந்த ராஜ்குமார், தனக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவரும், வாட்டாக்குடி கிராமத்தில் உறவினர் வீட்டில் வசித்து வந்தருமான தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை பெண் பார்த்து நிச்சயம் செய்தார்.

இந்த திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்த திருமண விவகாரம் சிங்கப்பூரில் உள்ள துர்காதேவிக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் ராஜ்குமாருக்கும், தனக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துமாறும் பெருகவாழ்ந்தான் போலீசாருக்கு ஆன்லைனில் கடந்த 15-ந் தேதி புகார் மனு அனுப்பி இருந்தார்.

இதற்கிடையில், நேற்று காலை ராஜ்குமாருக்கும், அவருக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்த ஆசிரியைக்கும் பெருகவாழ்ந்தான் முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக இருவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அதிகாலையிலேயே மண்டபத்திற்கு வந்தனர்.

இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக துர்காதேவி தனது நண்பர்கள், தோழிகள் சிலருடன் மலேசியாவில் இருந்து புறப்பட்டு நேற்று காலை முத்துப்பேட்டை வந்தார். அங்கு முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு இனிகோ திவ்யனிடம் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்தார்.

இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்திற்கு சென்ற துர்காதேவி, இன்ஸ்பெக்டர் சுப்ரியாவிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, துர்காதேவியை அழைத்துக்கொண்டு திருமணம் நடந்த மண்டபத்திற்கு சென்றார்.

இந்த நிலையில் திருமணத்தை தடுத்து நிறுத்துவற்காக துர்காதேவி மண்டபத்திற்கு வர உள்ள தகவல் அறிந்த இருவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், முகூர்த்த நேரத்திற்கு முன்னதாகவே ராஜ்குமாருக்கும், அந்த ஆசிரியைக்கும் திருமணத்தை நடத்தி முடித்து மணமக்களை மண்டபத்தில் இருந்து அனுப்பி வைத்து விட்டனர். போலீசார் மண்டபத்திற்கு சென்றபோது இருவரின் உறவினர்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து தனக்கும், ராஜ்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும், இந்த திருமணத்தை மறைத்து ராஜ்குமார் 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் கூறி மண்டபத்திலேயே அமர்ந்து துர்காதேவி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து துர்காதேவி, போலீசாரிடம் கூறியதாவது:-

நான் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறேன். அங்கு தனியார் கம்பெனியில் வேலை பார்த்த ராஜ்குமாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்தோம். கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி சிங்கப்பூர் சட்டப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

கடந்த 11-ந் தேதி ராஜ்குமார் தனது தாய், தந்தையை பார்த்து விட்டு வருவதாக கூறி பெருகவாழ்ந்தான் வந்து விட்டார். நாங்கள் அடிக்கடி போனில் பேசி வந்தோம். அவர் சிங்கப்பூருக்கு திரும்பி வராததால் ஏன் வரவில்லை என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், எனது தந்தை மற்றும் உறவினர்கள் சிங்கப்பூருக்கு போக வேண்டாம் என தடுத்து வருவதாக கூறினார்.

இதனிடையே அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடத்த போவதாக உறவினர்கள் மூலமாக அறிந்தேன். உடனடியாக திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன், பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் புகார் கொடுத்து விட்டு திருமணம் நடைபெற்ற இடத்திற்கு வந்தபோது ஏற்கனவே ராஜ்குமாருக்கு திருமணம் முடிந்து விட்டது என தெரிய வந்தது. எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு கூறிய துர்காதேவி, சிங்கப்பூரில் தங்கள் திருமணம் நடந்ததற்கான புகைப்படங்கள், திருமண பதிவு சான்றிதழையும் போலீசாரிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story