சென்னை புத்தக கண்காட்சி நிறைவு: உலகில் திருக்குறளுக்கு இணையான படைப்பு இல்லை நீதிபதி ஆர்.மகாதேவன் பெருமிதம்


சென்னை புத்தக கண்காட்சி நிறைவு: உலகில் திருக்குறளுக்கு இணையான படைப்பு இல்லை நீதிபதி ஆர்.மகாதேவன் பெருமிதம்
x
தினத்தந்தி 21 Jan 2019 3:23 AM IST (Updated: 21 Jan 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

உலகில் திருக்குறளுக்கு இணையான படைப்புகள் வரவில்லை என்று சென்னை புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் நீதிபதி ஆர்.மகாதேவன் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்து வந்த 42-வது புத்தக கண்காட்சியை கடந்த 4-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். 824 அரங்குகள், 12 லட்சம் தலைப்புகளில் 1½ கோடி புத்தகங்களுடன் கண்காட்சி தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், சினிமா, அரசியல் பிரமுகர்கள், புத்தக பிரியர்கள் என பலரும் வந்து கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை ஆர்வத்தோடு வாங்கி சென்றனர்.

17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியின் நிறைவு விழா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நேற்று நடந்தது. ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் 25 ஆண்டுகள் பதிப்புத்துறையில் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பதிப்பாளர்கள் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், திருக்குறள், ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை அவர் வழங்கினார்.

விழாவில் நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது:-
மானுடம் தழைக்க வேண்டும் என்றால் மண், பண்பாடு, கலாசாரம் சார்ந்த விஷயங்களை மனிதர்கள் அணுகி பார்க்கவேண்டும் என்றால் புத்தகங்களுடன் பரீட்சயம் அவசியம். புத்தகங்கள் மனிதனுக்கு தன்னையே அடையாளப்படுத்தி, தன்னை அறிந்து தனக்கான விஷயங்களை புரிந்துகொள்ளக் கூடிய தன்மை மிக்கவையாக என்றுமே நிலவும். 3 ஆயிரம் ஆண்டுகளை கடந்து உலகின் அனைத்து பரப்புகளிலுமே அறிவுசார்ந்த சிந்தனைகள் தொடர்ந்து செழித்து வந்திருக்கின்றன.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலாசார செழுமைமிக்க தமிழ் மண்ணில் தொல்காப்பியனும், வள்ளுவனும், இன்னும் சில படைப்பாளிகளும் தங்களுக்கான படைப்புகளை பதிவுசெய்து இருக்கிறார்கள். உலகத்துக்கு ஞானத்தை வாரிவழங்கிய மொழியாக அறியப்படுகிற ஆதி மொழி தமிழ்.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருக்கக்கூடிய சரித்திர கூறுகள், அகழ்வாராய்ச்சியின் குறிப்புகள், பாபிலோனியாவில் இருந்து வந்த சரித்திர குறிப்புகள், எகிப்து அகழ்வாராய்ச்சியின் சான்றுகள் என அனைத்திலும் தமிழ் சார்ந்த விஷயங்கள் தொன்றுதொட்டு வந்திருக்கின்றன. தமிழின் பழமை, பாரம்பரியம் ஆகியவற்றை நிலைத்திறுத்தக் கூடியவையாக அமைகிறது. உலகத்தில் தோன்றிய படைப்புகளிலேயே திருக்குறளுக்கு இணையான படைப்பு இதுவரை படைக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்றார். துணைத்தலைவர் பெ.மயிலவேலவன் நன்றி கூறினார்.

Next Story