பா.ஜனதாவுக்கு செல்ல இருந்ததை கூறியதாக 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் - அடிதடி காயமடைந்த ஆனந்த்சிங் மருத்துவமனையில் அனுமதி


பா.ஜனதாவுக்கு செல்ல இருந்ததை கூறியதாக 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் - அடிதடி காயமடைந்த ஆனந்த்சிங் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 21 Jan 2019 4:06 AM IST (Updated: 21 Jan 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் அருகே ரெசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள பல்லாரியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இடையே திடீரென மோதல் உண்டாகி அடிதடி ஏற்பட்டது. இந்த மோதலில் காயம் அடைந்த ஆனந்த்சிங், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மந்திரிசபை விரிவாக்கம் கடந்த மாதம் (டிசம்பர்) நடந்தது. அதில் 2 மந்திரிகள் நீக்கப்பட்டனர். புதிதாக 8 மந்திரிகள் பதவி ஏற்றனர். மந்திரி பதவியை பறித்ததால், ரமேஷ் ஜார்கிகோளி, சங்கர் ஆகியோர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர், அரசுக்கு அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார். மேலும் மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ.வான நாகேசும் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளார். அத்துடன் மந்திரி பதவி பறிக்கப்பட்டதால் ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ., காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். அவருடன் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்துள்ளனர். மொத்தம் 4 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை அக்கட்சியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் ஆகிய 4 பேர் புறக்கணித்தனர்.

இதில் உமேஷ் ஜாதவ் மற்றும் நாகேந்திரா ஆகியோர் தங்களால் பங்கேற்க இயலவில்லை என்று காரணம் தெரிவித்தனர். ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் மகேஷ் கமடள்ளி ஆகியோர் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை.

இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு, கூட்டத்தில் பங்கேற்ற 76 எம்.எல்.ஏ.க்களும் ராமநகர் அருகே உள்ள ஒரு தனியார் ரெசார்ட் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தை புறக்கணித்ததுடன், பதில் எதுவும் தெரிவிக்காத ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி ஆகிய 2 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி நோட்டீசு அனுப்பியுள்ளது. அதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தை புறக்கணித்த உங்களை சட்டப்படி ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது? என்று விளக்கம் கேட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

பா.ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் ரெசார்ட்டில் தங்க வைக்கப்படுவதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். இந்த நிலையில் ரெசார்ட்டில் நேற்று முன்தினம் இரவு, பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், பீமாநாயக், கணேஷ் ஆகிய மூன்று பேரும் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை குறித்து விவாதித்தனர். அந்த நேரத்தில் பீமாநாயக், கணேஷ் ஆகியோர் ஆனந்த்சிங்கிடம், நாங்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருந்த ரகசிய திட்டத்தை நீங்கள் தான் கட்சி தலைவர்களிடம் கூறி இருக்கிறீர்கள் என்று பேசினர்.

இது தொடர்பாக மூன்று பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. அப்போது அவர்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. பா.ஜனதாவுக்கு செல்லும் தங்களின் ரகசிய திட்டத்தை பகிரங்கப்படுத்தியதால் பீமாநாயக் மற்றும் கணேஷ் ஆகிய 2 பேரும் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு கட்டத்தில் ஆனந்த்சிங்கை கணேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. அவருடன் பீமாநாயக்கும் சேர்ந்துக் கொண்டார். இந்த தாக்குதல் மற்றும் அடிதடியால் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் பன்னரகட்டா ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை 7 மணியளவில் சென்றார்.

அங்கு டாக்டர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆனந்த்சிங்கை மந்திரி ஜமீர்அகமதுகான் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசரித்தனர்.

குதிரைபேரத்திற்கு பயந்து ரெசார்ட் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டு இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதல் சம்பவம் குறித்து கொப்பலில் நேற்று கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா, “ரெசார்ட் ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை பார்த்தேன். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இப்போது அங்கு தான் செல்கிறேன். சம்பவம் பற்றி விசாரிக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில் மந்திரி ஜமீர்அகமதுகான், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆனந்த்சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மந்திரி ஜமீர்அகமதுகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ரெசார்ட்டில் நண்பர்களுக்குள் சிறிய அளவில் தகராறு நடந்துள்ளது. பெரிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. நண்பர்களுக்குள் தகராறு ஏற்படுவது என்பது இயல்பானது. இதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன” என்றார்.

கர்நாடக நீா்ப்பாசனத்துறை மந்திரியும், எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள டி.கே.சிவக்குமார் கூறுகையில், “எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்கள் தான் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன” என்றார்.

இந்த மோதல் குறித்து டி.கே.சுரேஷ் எம்.பி. கூறும்போது, “ஆனந்த்சிங்குக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். ஆனால் ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அவை உண்மைக்கு புறம்பானவை” என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் தொடர்பாக மந்திரிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. தாக்கப்பட்டுள்ளார். இது எம்.எல்.ஏ.க்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். போலீசார் வழக்கு பதிவு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து சித்தராமையா பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

Next Story