தானேயில் போலி சான்றிதழுடன் மருந்துகடை நடத்திய 4 பேர் கைது மருந்தியல் கல்லூரி சேர்மனும் சிக்கினார்


தானேயில் போலி சான்றிதழுடன் மருந்துகடை நடத்திய 4 பேர் கைது மருந்தியல் கல்லூரி சேர்மனும் சிக்கினார்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:56 AM IST (Updated: 21 Jan 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் போலி சான்றிதழை வைத்து மருந்துகடை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அந்த சான்றிதழ்களை வழங்கிய மருந்தியல் கல்லூரி சேர்மனும் கைதானார்.

தானே,

தானேயில் ராஜூ யாதவ், அரவிந்த்குமார், புத்தாராம் அஜ்னேயா, பல்வந்த் சிங் சவுகான் ஆகிய 4 பேர் போலி மருந்தாளுனர் சான்றிதழை வைத்து மருந்து கடை நடத்தி வருவதாக தீபன்கர் கோஷ் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மேற்படி 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் என்பது தெரியவந்தது. போலி மருந்தாளுனர் சான்றிதழை பயன்படுத்தி மருந்து கடை நடத்தி வந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அந்த போலி மருந்தாளுனர் சான்றிதழ்களை தானேயில் உள்ள மருந்தியல் கல்லூரியில் இருந்து பணம் கொடுத்து வாங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த போலி சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கிய அந்த கல்லூரியின் சேர்மன் புருஷோத்தம் தகில்ரமணியையும் அதிரடியாக கைது செய்தனர். அவர் மேலும் பலருக்கு இவ்வாறு போலி மருந்தாளுனர் சான்றிதழ்களை வழங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவர்களை வருகிற 24-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story