‘மும்பை மாரத்தான்' போட்டியில் 46 ஆயிரம் பேர் ஓடினர்


‘மும்பை மாரத்தான் போட்டியில் 46 ஆயிரம் பேர் ஓடினர்
x
தினத்தந்தி 21 Jan 2019 5:30 AM IST (Updated: 21 Jan 2019 5:20 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நேற்று நடந்த ‘மும்பை மாரத்தான்' போட்டியில் 46 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினர்.

மும்பை,

‘உலகின் டாப் 10' மாரத்தான் போட்டிகளில் ஒன்றான ‘மும்பை மாரத்தான்' போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக 46 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே திரண்டனர்.

42 கிலோ மீட்டர் முழு மாரத்தான் போட்டி மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து காலை 7.20 மணிக்கும், 21 கிலோ மீட்டர் அரை மாரத்தான் போட்டி ஒர்லி டைரி பகுதியில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கும் தொடங்கியது.

இதில், மும்பை உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான ஆடைகளை அணிந்து மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளை சி.எஸ்.எம்.டி.யில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்தவாறு கவர்னர் வித்யாசாகர் ராவ், துப்பாக்கியால் சுட்டு தொடங்கி வைத்தார். இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ், மந்திரிகள் வினோத் தாவ்டே, சுபாஷ் தேசாய் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது அங்கு குவிந்து இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வமாக மாரத்தானில் கலந்து கொண்டு ஓடினர். பொதுமக்கள் மட்டுமின்றி நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட திரை பிரபலங்கள், தொழில் அதிபர்கள், டப்பாவாலாக்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.
ஆண்களுக்ககான முழு மாரத்தான் போட்டியில் கென்யாவை சேர்ந்த காஸ்மாஸ் லகட் போட்டி தூரத்தை 2 மணி 9 நிமிடம் 15 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார்.

பெண்களுக்கான முழு மாரத்தான் போட்டியில் எத்தியோப்பியாவை சேர்ந்த ஒர்க்னஸ் அலெமு போட்டி தூரத்தை 2 மணி 25 நிமிடம் 45 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.

இந்தியர்களுக்கான முழு மாரத்தான் ஆண்கள் பிரிவில் நிதேந்திர சிங் ராவத் முதலிடம் பிடித்தார். அவர் போட்டி தூரத்தை 2 மணி 15 நிமிடம் 52 வினாடிகளில் கடந்தார்.

இந்தியர்களுக்கான முழு மாரத்தான் பெண்கள் பிரிவில் சுதா சிங் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். அவர் போட்டி தூரத்தை 2 மணி 34 நிமிடம் 55 வினாடிகளில் கடந்தார்.

இந்தியர்களுக்கான அரை மாரத்தான் ஆண்கள் பிரிவில் போட்டி தூரத்தை 1 மணி 5 நிமிடம் 49 வினாடிகளில் ஸ்ரீனிரு புகதா என்பவர் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

இந்தியர்களுக்கான அரை மாரத்தான் பெண்கள் பிரிவில் மீனு என்பவர் போட்டி தூரத்தை 1 மணி 18 நிமிடம் 5 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார்.

மும்பை மாரத்தான் போட்டியையொட்டி நேற்று சி.எஸ்.எம்.டி. பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Next Story