அம்பலமூலா அருகே வனப்பகுதியில் தீ வைத்த 2 பேர் கைது


அம்பலமூலா அருகே வனப்பகுதியில் தீ வைத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 6:11 PM GMT)

அம்பலமூலா அருகே வனப்பகுதியில் தீ வைத்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அம்பலமூலா அருகே நரிக்கொல்லியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால், வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோத கும்பல்கள் வனப்பகுதிக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்று விடுகின்றனர். இதனால் காட்டுத்தீ பரவி வனப்பகுதி எரிந்து நாசமாகிறது.

இதனால் வனப்பகுதியை பாதுகாக்க கண்காணிப்பு கேமரா பொருத்த கூடலூர் வன அலுவலர் ராகுல் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதையொட்டி வனப்பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நரிக்கொல்லி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர்கள் காலன், ராஜேஷ்குமார், காவலர் தம்பகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அடையாளம் தெரியாத ஆசாமிகள் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதற்கிடையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பல ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி தீயில் கருகியது.

பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் 2 பேர் வனப்பகுதிக்கு தீ வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த நபர்களை பற்றிய அடையாளமும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து அம்பலமூலா பகுதியை சேர்ந்த சிவக்குமார்(வயது 34), மாதவன்(44) ஆகிய 2 பேர் மீது பிதிர்காடு வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவர்களை கைது செய்தனர்.

Next Story