திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச பெருவிழாவையொட்டி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி


திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச பெருவிழாவையொட்டி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 21 Jan 2019 10:30 PM GMT (Updated: 21 Jan 2019 6:43 PM GMT)

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச பெருவிழாவையொட்டி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் பஞ்சரத தேரோட்டம் நடந்தது.

தொடர்ந்து நேற்று பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு நடந்தது. மாலை 3 மணிக்கு திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் உள்ள தைப்பூச படித்துறைக்கு மகாலிங்க சுவாமி, பெருநலமாமுலையம்மை, விநாயகர், சுப்பிரமணியர், சண்டி கேஸ்வரர் எழுந்தருளினர்.

அப்போது கல்யாணபுரம் படித்துறையில் பிரசன்ன வெங்கடாஜலபதி, கிராம கோவில்களின் உற்சவ மூர்த்திகள் ஆகியோர் எழுந்தருளினர். அதன்பின்னர் தைப்பூச படித்துறையில் காவிரி ஆற்றில் அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது.

இதில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவிடைமருதூர் ஆதீன விசாரணை கட்டளை ஸ்ரீமத் சுவாமி நாததம்பிரான் சுவாமிகள், தாசில்தார் ராஜேஸ்வரி, சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன், கோவில் கண்காணிப்பாளர் சுந்தரம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது.

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலுக்கு சொந்தமான 40 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story