கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கொலை வழக்கில் 5 பேர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கொலை வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2019 3:45 AM IST (Updated: 22 Jan 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள மா.பொ.சி.நகரைச்சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 17). பாலிடெக்னிக் மாணவர். இவருடைய நண்பர்கள் கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவைச்சேர்ந்த விமல்(21), சென்னை தண்டையார்ப் பேட்டையை சேர்ந்த சதிஷ்(26). இவர்கள் 3 பேரும் கடந்த 19-ந்தேதி இரவு கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள மா.பொ.சி.நகரில் மர்ம கும்பலால் பயங்கர ஆயுதங்களைக்கொண்டு ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டியில் ஒரே நாள் இரவில் 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) துரைராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை கூண்டோடு பிடித்திட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி கும்மிடிப்பூண்டியில் முகாமிட்டு கொலையாளிகளை பிடித்திட 6 தனிப்படைகளை அமைத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார். சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளிகளை பிடித்திட தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

மேலும், 3 பேர் படுகொலை தொடர்பாக கஞ்சா வியாபாரிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் கொலையாளிகள் என சந்தேக வளையத்திற்குள் வந்த நபர்களின் உறவினர்கள் என 5 பெண்கள் உள்பட 18 பேரிடம் கடந்த 2 நாட்களாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர்களான புதுகும்மிடிப்பூண்டியைச்சேர்ந்த நடராஜ் (26), பாஸ்கர்(32), கும்மிடிப்பூண்டியைச்சேர்ந்த நாகராஜ் (24), சித்தராஜகண்டிகை கிராமத்தைச்சேர்ந்த வினோத்குமார் (25) மற்றும் ஆத்துப்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த மாதவன்(23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை கஞ்சா பிரச்சினை காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் 5 பேரையும் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் வைத்து தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் எத்தனை பேர்? கொலை செய்து விட்டு எங்கு தலைமறைவாக இருந்தனர்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story