தந்தையின் குடி பழக்கத்தால் செங்கல் காளவாசலில் பரிதவித்த 3 குழந்தைகள் மீட்பு


தந்தையின் குடி பழக்கத்தால் செங்கல் காளவாசலில் பரிதவித்த 3 குழந்தைகள் மீட்பு
x
தினத்தந்தி 22 Jan 2019 4:15 AM IST (Updated: 22 Jan 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

தந்தையின் குடிபழக்கத்தால் செங்கல் காளவாசலில் பரிதவித்த 3 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களுடைய பெற்றோருக்கு அறிரைவுகள் வழங்கி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு செங்கல் காளவாசலில் 3 குழந்தைகள் போதிய உணவு இன்றி பரிதவிப்பதாக சைல்டு லைன் குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சைல்டு லைன் குழு உறுப்பினர்கள் ராஜா, கோகிலவாணி மற்றும் ஆண்டிப்பட்டி போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது, அங்கு ஒரு தகர கொட்டகையில் 10 வயது சிறுமியும், அவருடைய 2 தம்பிகளும் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, அவர்களின் தந்தையும் அங்கு தான் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர்களுடைய தந்தையிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூலி வேலை செய்து வருவதாக தெரிவித்தார்.

இந்த குழந்தைகளின் தாயார், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். கணவன், மனைவி இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த கூலித்தொழிலாளி தனது மனைவியிடம் தகராறு செய்து விட்டு, 3 குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் செங்கல் காளவாசலில் தங்கி வேலை செய்ததோடு கிடைத்த பணத்தில் மது குடித்துவிட்டு குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால், குழந்தைகள் பரிதவித்த நிலையில், அங்கு வந்த கூலித்தொழிலாளர்கள் சிலர் உணவு கொடுத்து உதவியதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து 3 குழந்தைகளையும், அவருடைய தந்தையையும் போலீசார் மற்றும் சைல்டு லைன் குழுவினர் தேனி குழந்தைகள் நலக்குழு அலுவலத்துக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து குழந்தைகளின் தாயார் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாயாரும் அவருடைய உறவினர்களும்தேனிக்கு வந்தனர்.

பின்னர், குழந்தைகளின் பெற்றோருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. குழந்தைகளை நல்ல முறையில் பராமரிப்போம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோருடன் 3 குழந்தைகளையும் அனுப்பி வைத்தனர். குழந்தைகள் நலன்கருதி அவர் களது பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story