வழக்கு விசாரணைக்காக பெரியகுளம் கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் ஆஜர்
வழக்கு விசாரணைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவோயிஸ்டுகள் பெரியகுளம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி ஆயுத பயிற்சியில் ஈடுபட முயன்ற மாவோயிஸ்டுகள் வேல்முருகன், முத்துசெல்வம், பழனிவேல் ஆகிய 3 பேரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தப்பியோடிய மாவோயிஸ்டுகளின் தலைவனாக கருதப்படும் சுந்தரமூர்த்தி, கார்த்திக், ஈஸ்வரன், பாலன் என்ற பாலகிருஷ்ணன், ரஞ்சித், விவேக் ஆகியோரை போலீசார் பல்வேறு இடங்களில் கைது செய்தனர். இந்த வழக்கு பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக சேலம் சிறையில் இருந்த பழனிவேலு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிபதி விஜயகுமார் முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 4-ந் தேதி மீண்டும் பழனிவேலுவை ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அதேபோன்று வருசநாடு மலைப்பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பாலமுருகன், மகாலிங்கம், முருகானந்தம் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு பெரியகுளத்தில் உள்ள கூடுதல் மாவட்ட செசுன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதையடுத்து வழக்கு சம்பந்தமாக மதுரை மத்திய சிறையில் இருந்து மகாலிங்கம் மற்றும் பாலமுருகனை கியூ பிரிவு போலீசார் அழைத்து வந்து கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். மேலும் ஜாமீனில் உள்ள முருகானந்தமும் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திலகம் விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் மாவோயிஸ்டுகளை போலீசார் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story