கரூர் மாவட்டத்தில் இன்று தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்


கரூர் மாவட்டத்தில் இன்று தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 8:32 PM GMT)

கரூர் மாவட்டத்தில் தி.மு.க.சார்பில் இன்று நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

கரூர்,

கரூர் மாவட்ட தி.மு.க.சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈசநத்தம் ஊராட்சியில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கும், பகல் 11.30 மணியளவில் சின்னதாராபுரத்தில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், கலந்து கொள்ள மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கரூர் வந்தார். ஊராட்சி சபை கூட்டங்களில் பங்கேற்கும் அவர், மாலை 3.30 மணியளவில் கரூர் வேலம்மாள் லேஅவுட் அருகில் உள்ள மறைந்த நெசவாளர் அணி தலைவர் பரமத்தி சண்முகம் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்தை திறந்து வைக்கிறார்.

மாலை 4 மணிக்கு வேட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நொய்யல் அம்மையப்பர் திருமண மஹால் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 5 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் ஒரே இடத்தில் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி உள்பட கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கரூர் விழா கோலம் பூண்டுள்ளது. மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று காலை 9 மணிக்கு கரூர்-கோவை ரோடு ரெசிடென்சி ஓட்டல் அருகே சிறப்பான வரவேற்பும், தாந்தோணி ஒன்றிய தி.மு.க.சார்பில் பாகனத்தம் பஸ் நிலையம் அருகே வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்றனர். பின்னர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் கரூர் புறப்பட்டு சென்றார். 

Next Story