கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளர் கைது ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு


கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளர் கைது ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jan 2019 11:15 PM GMT (Updated: 21 Jan 2019 8:43 PM GMT)

கந்துவட்டி கொடுமையால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அவர் அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மனு கொடுக்க வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து திடீரென தன்னுடைய உடலில் ஊற்றிக்கொண்டார். பின்னர் தீக்குளிப்பதற்காக தீப்பெட்டியை எடுக்க முயன்றார்.

அப்போது அங்கு நின்றிருந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் செந்தில் விரைந்து சென்று அவருடைய கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினார். அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை பிடித்தனர். அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி சென்று தீக்குளிக்க முயன்றார். பின்னர் நுழைவு வாயில் அருகில் தயாராக வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை எடுத்து போலீசார் அவர் மீது ஊற்றினார்கள்.

இதையடுத்து அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் அந்தியூரை சேர்ந்த கணேசன் (வயது 39) என்பதும், அந்தியூர் பஸ் நிலையத்தில் பேக்கரி வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. கடந்த 2012–ம் ஆண்டு தொழில் வளர்ச்சிக்காக கணேசன் ஒருவரிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கியதும், கடன் கொடுத்தவர் அதிகமான வட்டி கேட்டதால் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க வந்ததும், கந்துவட்டி கொடுமையால் கணேசன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்கொலை முயற்சி, பொது இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேக்கரி உரிமையாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story