குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு
குடிநீர் வசதி செய்து தரக்கோரி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கருஞ்சுத்தி கிராம மக்கள் சார்பில் கலெக்டரிறீம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:– இளையான்குடி அருகே உள்ள கருஞ்சுத்தி கிராமத்தில் சுமார் 150–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எங்கள் கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த குடிநீருக்கான ஆழ்துளைக் கிணறு பழுதடைந்து விட்டது.
இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய தேவையான குடிநீருக்கு மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் எங்கள் கிராமத்தினர் குடிநீர் பிரச்சினையால் அவதியடைந்து வருகிறோம்.
ஆகவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கருஞ்சுத்தி கிராம மக்கள் நலன் கருதி பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணற்றை சரி செய்து தர வேண்டும். கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல காளையார்கோவில் அருகே உள்ள கீரனூர் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.