நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா
நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊத்துக்குளி ஆதியூர் பிரிவு விருமாண்டம்பாளையம் பாபண்ணநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் பகுதியில் ஏராளமானோர் குடியிருந்து வருகிறோம். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை வாங்கி இங்கு வந்து வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். இடத்தை வாங்கும் போது குறிப்பிட்ட நாட்களுக்குள் கிரயம் செய்து தருவதாக இதன் உரிமையாளர் எங்களிடம் கூறினார். ஆனால் இதுவரை நிலம் கிரயம் செய்யப்படாமலே இருந்து வருகிறது.
அவரிடம் பலமுறை கேட்டும், அவர் எந்த பதிலும் கூறாமல் எங்களை ஏமாற்றி மோசடி செய்து வருகிறார். இதனால் அரசின் திட்டங்கள் உள்பட பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் இருந்து வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக எங்கள் நிலத்தை கிரயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை ஊராட்சி ஊர் பொதுமக்கள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
அலகுமலை பகுதியில் 150–க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக அங்கு நாங்கள் வசித்து வருகிறோம். எந்த சாதிய பாகுபாடும் இல்லாமல் அனைவரிடமும் பழகி வந்தோம். எங்கள் குடியிருப்புக்கு அருகில் ஈஸ்வரன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு முன்பாக 2.90 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் கோவிலுக்கும், அரசு தொடக்கப்பள்ளிக்கும் இடையில் உள்ள 25 அடி அகலம் உள்ள பாதை ஒன்று உள்ளது. இந்த பாதையை குடிநீர் எடுக்கவும், மாணவ–மாணவிகள் பள்ளிக்கு செல்லவும், தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள பூசாரிகள் சிலர் நாங்கள் இந்த பாதையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அதை சுற்றி கம்பி வேலி அமைத்து வைத்தனர். இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் இந்த கம்பி வேலியில் ஒரு பகுதி அகற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த பகுதியில் மீண்டும் இரும்பு கதவு அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.