“பட்டாசு தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க அரசு முயற்சிக்கவில்லை” அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேச்சு
பட்டாசு தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க. அரசு முயற்சிக்க வில்லை என்று அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி குற்றம் சாட்டினார்.
தாயில்பட்டி,
விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சர்பில் ஏழாயிரம்பண்ணையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் நல்லதம்பி, இளைஞர் பாசறை துணை செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அழகுராஜா, மகளிரணி மேற்கு மாவட்ட செயலாளர் கவிதா தனசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் போஸ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் பேசுகையில், மீண்டும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெறுவேன். பாராளுமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. விருதுநகர் தொகுதியில்தான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசியதாவது:–
இடைத்தேர்தல்களை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க., தயாராக இல்லை. திருவாரூர் தொகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வில்லை. எனவே அங்கு அ.தி.மு.க., தி.மு.க. வெற்றி பெற முடியாது.
பட்டாசு தொழிலை காப்பாற்ற அ.தி.மு.க. அரசு முயற்சி செய்யவில்லை. சிவகாசி முன்னாள் எம்.பி.யாக இருந்த வைகோ எதற்கெல்லாமோ குரல் கொடுக்கிறார். தன்னை தோற்கடித்த தொகுதி என்பதாலோ என்னவோ பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருப்பது குறித்து குரல் கொடுக்க வில்லை. ஆனால் நமது துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பட்டாசு தொழில் அழிந்து விடக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கோடநாடு கொலை வழக்கில் முதல்வர் ஜெயிலுக்கு போவது உறுதி.
ஜி.எஸ்.டி.யால் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. மோடியை எதிர்க்க தி.மு.க. தலைவர் கூடப் பயப்படுகிறார். ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும் மோடியை தைரியமாக எதிர்க்கக் கூடிய தலைவர் தினகரன் மட்டுமே. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று அடுத்த இந்திய பிரதமர் யார் என்பதை தினகரன் முடிவெடுப்பார்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் செய்திருந்தார். முடிவில் திருத்தங்கல் நகர செயலாளர் சரவணக்குமார் நன்றி கூறினார்.