நாகியம்பட்டியில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் 25 பேர் காயம்


நாகியம்பட்டியில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் 25 பேர் காயம்
x
தினத்தந்தி 21 Jan 2019 10:46 PM GMT (Updated: 21 Jan 2019 10:46 PM GMT)

கெங்கவல்லி அருகே நாகியம்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், சீறிப்பாய்ந்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினார்கள். இதில் மாடு முட்டியதில் 25 பேர் காயம் அடைந்தனர்.

தம்மம்பட்டி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நாகியம்பட்டியில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருவது வழக்கம். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையால் கடந்த சில ஆண்டுகளாக நாகியம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருந்தது.

அதேசமயம் ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அரசிதழில் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து நேற்று நாகியம்பட்டியில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது.

நாகியம்பட்டி தோப்புமண்டி மைதானத்தில் நடந்த இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கள்ளக்குறிச்சி எம்.பி.காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் மருதமுத்து, சின்னதம்பி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன், கெங்கவல்லி தாசில்தார் சுந்தர்ராஜன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், அதிகாரிகள் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 667 காளைகள் பங்கேற்றன. 400–க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கினர். ஒரு சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் ஓடியது. அதேசமயம் சீறிப்பாய்ந்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டியபோது, பார்வையாளர்கள் கைகளை தட்டியும், விசில் அடித்தும் உற்சாகப்படுத்தியதை காணமுடிந்தது.

காளைகளை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. அதாவது, வெள்ளி நாணயம், சில்வர் பாத்திரங்கள், டிராவல் பேக் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு நடைபெற்ற மைதானத்தில் பார்வையாளர்கள் யாரும் உள்ளே வராதபடி இரண்டடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 25 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

மேலும், படுகாயம் அடைந்த கீரிப்பட்டியை சேர்ந்த தருண்குமார் (வயது 17), நாகியம்பட்டியை சேர்ந்த வீரமுத்து, செல்வம் ஆகிய 3 வீரர்கள் மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மேற்பார்வையில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்கார்த்திக் குமார் தலைமையில் 300–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story