சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: 3–வது நிலக்கரி சுரங்கம் அமைக்க என்.எல்.சி.யை அனுமதிக்க மாட்டோம் அருண்மொழிதேவன் எம்.பி. பேச்சு


சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: 3–வது நிலக்கரி சுரங்கம் அமைக்க என்.எல்.சி.யை அனுமதிக்க மாட்டோம் அருண்மொழிதேவன் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2019 11:30 PM GMT (Updated: 21 Jan 2019 10:58 PM GMT)

3–வது நிலக்கரி சுரங்கம் அமைக்க என்.எல்.சி.யை அனுமதிக்க மாட்டோம் என்று சேத்தியாத்தோப்பில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அருண்மொழிதேவன் எம்.பி. பேசினார்.

சேத்தியாத்தோப்பு,

புவனகிரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடைபெற்றது இதற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கீரப்பாளையம் ஜெயபாலன், கம்மாபுரம் முனுசாமி, ஸ்ரீமுஷ்ணம் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பாலசுந்தரம் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தலைமை கழக பேச்சாளர்கள் சேகர், நாஞ்சில் தளவாய் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.பி., சந்திரகாசி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் அருண்மொழிதேவன் எம்.பி. பேசுகையில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக சரியாக செய்து வருகிறார். விவசாயிகள் சார்ந்த திட்டம் எதுவாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

சேத்தியாத்தோப்பு பகுதியில் 3–வது நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவித்தது அ.தி.மு.க. அரசு தான். இதுகுறித்து முதல்–அமைச்சரிடம் நான் பேசியபோது பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்க சொல்லி என்னிடம் தெரிவித்தார். விவசாயிகளுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை விட மாட்டோம் என முதல்–அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே 3–வது நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணிக்காக என்.எல்.சி. நிறுவனம் ஒருபிடி மண்ணை கூட எடுக்க அரசும், நாங்களும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலவன் தலைமையில் 30 பேரும், சேகர் தலைமையில் தினக்கூலி தொழிலாளர்கள் 70 பேரும், ஆதனூர், சின்னநற்குணம், பெரியநற்குணம் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமு, தொகுதி செயலாளர் எஸ்.பி.கருப்பன், சிதம்பரம் சி.சி.எம். தலைவர் சண்முகம், துணைத்தலைவர் நன்மாறன், எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத்தலைவர் விநாயகம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், கூட்டுறவு சங்க தலைவர் பிரிதிவி, கிளை செயலாளர் ஜெயசீலன், நிர்வாகிகள் பிரகாஷ், ராஜா, சத்குரு, எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை அண்ணா தொழிற்சங்க மாநில பொருளாளர் சண்முகம், சர்க்கரை ஆலை தலைவர் மாரியப்பன், கணேசன், சம்பத், நகர நிர்வாகிகள் ஸ்ரீதர், திருநாவுக்கரசு ஜபருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story