கொடைரோடு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை


கொடைரோடு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 22 Jan 2019 4:36 AM IST (Updated: 22 Jan 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து மதுபாட்டில்களை அள்ளிச்சென்றனர்.

கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள மாலையகவுண்டன்பட்டி ரெயில்வே கேட் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாட்ராயன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இந்த கடையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர் ராஜலிங்கம் மற்றும் விற்பனையாளர் விவேகானந்தன் ஆகியோர் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு இரவு 10 மணிக்கு மேல் அவர்கள் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு சென்றனர்.

இந்தநிலையில் நள்ளிரவு ஒரு காரில் 5 முகமூடி கொள்ளையர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். அங்கு தோட்டத்தின் காவலாளி வெள்ளிமலை என்பவர் இருந்தார். அவரை கொள்ளையர்கள் கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி கடை அருகே உட்கார வைத்தனர்.

பின்னர் அந்த முகமூடி கொள்ளையர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு அவர்கள் உள்ளே இருந்த 5 மதுபாட்டில் பெட்டிகளையும், ரூ.900-யையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். இதையடுத்து கடையின் முன்பு முகமூடி கொள்ளையர்கள் உட்கார்ந்து மது அருந்தி விட்டு, 5 பெட்டிகளில் இருந்த 240 மதுபாட்டில்களையும் அள்ளிச்சென்றனர். பின்னர் காவலாளி வெள்ளிமலையை மிரட்டிவிட்டு முகமூடி கொள்ளையர்கள் காரில் ஏறி தப்பிச்சென்றனர். கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.27 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து காவலாளி வெள்ளிமலை அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மேலும் டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்மையநாயக்கனூர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுபோல டாஸ்மாக் கடை அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் இருந்த மோட்டார் அறை கதவின் பூட்டை உடைத்து சென்றுள்ளதாக விவசாயி ஒருவர் புகார் கூறியுள்ளார். இந்த சம்பவம் கொடைரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story