171 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்


171 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:14 PM GMT (Updated: 21 Jan 2019 11:42 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 171 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நேற்று தொடங்கியது.

வேலூர்,

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை போன்று அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலும் நேற்று அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கியது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 171 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் அனைத்திலும் நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அங்கன்வாடி மையங்களில் படித்து வந்தனர்.

அவர்களில் 3½ வயது வரை உள்ளவர்கள் எல்.கே.ஜி. வகுப்பிலும், 4½ வயதுவரை உள்ளவர்கள் யு.கே.ஜி. வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். வகுப்புகள் தொடங்கியதை தொடர்ந்து அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரிய-ஆசிரியைகள் கண்டறியப்பட்டு அவர்கள் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு மாண்டிச்சோரி கல்வி குறித்து பயிற்சியளிக்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story