ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.21¾ லட்சம் மோசடி - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.21¾ லட்சம் மோசடி - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:23 PM GMT (Updated: 2019-01-22T04:53:31+05:30)

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.21 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வேலூர்,

அணைக்கட்டு தாலுகா ஊசூர் அருகேயுள்ள சிவநாதபுரத்தை சேர்ந்தவர் வினாயகம் (வயது 60). இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின்நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்தேன். அப்போது என்னுடன் ஊசூர் புதூரை சேர்ந்த காவலாளி ஒருவரும் பணிபுரிந்தார். அவர் என்னிடம், ‘இந்திய ராணுவத்தில் பணிபுரியும் உயர்அதிகாரி ஒருவர் எனக்கு தெரிந்தவர், எனவே அவர் மூலம் ராணுவத்தில் வேலை வாங்கி தருகிறேன். இதற்கு ரூ.1½ லட்சம் செலவாகும்’ என்று தெரிவித்தார். இதனை நான் உடன் பணிபுரிந்த காவலாளிகள் மற்றும் எனது உறவினர்களிடம் கூறினேன்.

அதன்பேரில் 19 பேர் வேலை வாங்கி தரக்கோரி தந்த ரூ.21 லட்சத்து 80 ஆயிரத்தை முதற்கட்டமாக அவரிடம் வழங்கினேன். ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார்.

இதுகுறித்து அரியூர் போலீசில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகார் அளித்தேன். அதன்பேரில் போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் 6 மாதங்களில் பணத்தை திருப்பி கொடுப்பதாக எழுதிக் கொடுத்தார். ஆனால் 6 மாதங்கள் கடந்தும் இதுவரை அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. தற்போது அவர் எங்கே உள்ளார் என தெரியவில்லை.

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.21 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுத்த பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.


Next Story