திருவேங்கடம் அருகே வெறிநாய் கடித்து 18 ஆடுகள் சாவு


திருவேங்கடம் அருகே வெறிநாய் கடித்து 18 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 21 Jan 2019 11:47 PM GMT (Updated: 2019-01-22T05:17:09+05:30)

திருவேங்கடம் அருகே வெறிநாய் கடித்து 18 ஆடுகள் செத்தன.

திருவேங்கடம், 

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி கல்யாண மண்டப தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது 50). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். தனது வீட்டின் அருகே பட்டி அமைத்து, அங்கு ஆடுகளை அடைத்து விடுவது வழக்கம். முத்தையாவும் இரவு நேரத்தில் ஆடுகளுக்கு பாதுகாப்பாக பட்டியின் அருகேயே தூங்குவது உண்டாம். இந்த நிலையில் முத்தையா திருச்செந்தூர் தைப்பூச திருவிழாவுக்கு மாலை அணிந்து கோவிலுக்கு பாதயாத்திரை சென்றுவிட்டார். அவருடைய மனைவி மூக்கம்மாள் (45) மற்றும் மகன்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். நேற்று அதிகாலை அந்த வழியாக வந்த ஒருவர், ஆடுகளை நாய் ஒன்று கடித்து குதறிக் கொண்டிருப்பதை கண்டு அதை கல்லால் விரட்டினாராம். ஆனால் அந்த நாய் அவரையும் தாக்க வந்துள்ளது. இதனால் அவர் ஆட்களை திரட்டியதும் நாய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மூக்கம்மாள் மற்றும் அவருடைய மகன்கள் வந்து பார்த்தனர். அங்கு 18 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். அவைகளின் கழுத்தில் மட்டும் நாய் கடித்து ரத்தத்தை உறிஞ்சியுள்ளதும், எனவே ஆடுகள் வெறிநாய் கடித்து இறந்தது தெரியவந்தது.

கலிங்கப்பட்டி கால்நடை மருத்துவர்கள் வந்து ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் காயம் அடைந்த 6 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அ.கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் மனோகரன், கலிங்கப்பட்டி பகுதி-2 கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வெறிநாய் கடித்து 18 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story