கன்னியகோவில் பகுதியில் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் போராட்டம்


கன்னியகோவில் பகுதியில் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2019 5:50 AM IST (Updated: 22 Jan 2019 5:50 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை– கடலூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

பாகூர்,

மாட்டு வண்டி தொழிலாளர்களை அங்கீகாரம் செய்து நலவாரியத்தில் சேர்க்க வேண்டும், மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்டு உள்ள குண்டர் தடை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை நிபந்தனை இன்றி தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னிய கோவில் பகுதியில் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுவை பிரதேச மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) மற்றும் இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் ஆகியவை சார்பில் நடந்த இந்த மறியல் போராட்டத்துக்கு சிவானந்தம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செல்வராஜ், கலியமூர்த்தி, அரிதாஸ், குணசேகரன், தமிழ்செல்வன், சீனுவாசன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னர் மற்றும் அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதில் பாகூர், குருவிநத்தம், கிருமாம்பாக்கம், மதிகிருஷ்ணாபுரம், சோரியாங்குப்பம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இன்ஸ்பெக்டர்கள் கவுதம் சிவகணேஷ், பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, வீரன், சந்திரசேகரன், திருமுருகன், மற்றும் கிருமாம்பாக்கம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்களை போலீசார் கைது செய்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த மறியல் காரணமாக புதுவை –கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story