வனத்துறையினர் கைது செய்த வாலிபரை விடுவிக்கக்கோரி கோத்தர் இன மக்கள் முற்றுகை போராட்டம்


வனத்துறையினர் கைது செய்த வாலிபரை விடுவிக்கக்கோரி கோத்தர் இன மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:45 PM GMT (Updated: 22 Jan 2019 7:16 PM GMT)

வனத்துறையினர் கைது செய்த வாலிபரை விடுவிக்கக்கோரி கோத்தர் இன மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி, 


நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பைக்காரா, கிளன்மார்கன், 6-வது மைல், தலைகுந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறை கட்டுப்பாட்டில் புல்வெளிகள், வனப்பகுதிகள் உள்ளன. கிளன்மார்கன் அருகே வென்லாக் டவுன் காப்புக்காட்டு பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததாக தலைகுந்தாவை சேர்ந்த சானவாஸ் (வயது 33) என்பவரை வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.

இதை அறிந்த கோத்தர் இன மக்கள் ஊட்டி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அவர்கள், பார்வதி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ததாகவும், கம்பட்டராயர் பண்டிகையை முன்னிட்டு கொல்லிமலைக்கு அப்பகுதி கோத்தர்கள் சென்றதால், தங்களது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வேலைக்கு வந்திருந்த சானவாசை கைது செய்யக்கூடாது என்று கூறினர்.

இதற்கிடையே ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின்படி, சானவாஸ் ஊட்டி கிளை சிறையில் அடைக்க வனத்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது சானவாசை விடுவிக்கக்கோரி கோத்தர் இன மக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். அதன் காரணமாக சானவாஸ் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று கோத்தர் இன மக்கள் கோத்தர் இன தலைவர் சந்திர பெள்ளன் தலைமையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த வந்தனர்.

அந்த நேரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்ததால், அவர்கள் நீலகிரி மாவட்ட வன அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோத்தர் இன மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், அப்பகுதியில் உள்ள ஆயிரத்து 800 ஏக்கர் நிலம் தங்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் மேய்ச்சலுக்காக வழங்கப்பட்டதாகவும், தற்போது வனத்துறையினர் வழக்கு போட்டு ஒருவரை கைது செய்து உள்ளதாகவும், உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்ட கலெக்டரை சந்தித்து உங்களது கோரிக்கையை தெரிவித்து தீர்வு காணும்படி போலீசார் கூறினர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் சில ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வெளி நபர்கள் கோத்தர் இன மக்களை பயன்படுத்தி ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். இதனை கண்டறிந்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே சானவாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கோத்தர் இன மக்களுக்கு குறைந்த அளவில் தொகையை கொடுத்து, அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இதேபோன்று வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story