ரூ.5 லட்சம் லஞ்ச புகார்: போலீஸ் உதவி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கியது


ரூ.5 லட்சம் லஞ்ச புகார்: போலீஸ் உதவி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கியது
x
தினத்தந்தி 22 Jan 2019 9:45 PM GMT (Updated: 22 Jan 2019 7:35 PM GMT)

வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில் சிக்கிய போலீஸ் உதவி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகர் போலீஸ் உதவி கமிஷனர் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்தழகு. இவர் தேனாம்பேட்டை உதவி கமிஷனராக

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரை இருந்தார். ராமநாதபுரம் சேதுபதி மன்னர் குடும்ப வாரிசான கார்த்திக் சேதுபதி என்பவரை அவரது உறவினர்கள் சிலர் ரவுடி கும்பலுடன் சேர்ந்து கடத்தி சென்று சொத்துகளை அபகரிக்க முயன்றதாக அப்போது பணியில் இருந்த முத்தழகுவுக்கு புகார் வந்தது.

இதனை விசாரித்த முத்தழகு மற்றும் போலீசார் கடந்த மே மாதம் தேனாம்பேட்டையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ரவுடி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய பிரகாஷ் என்பவர், தன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமலிருக்க உதவி கமிஷனர் முத்தழகுவை தொடர்புகொண்டு பேசினார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என பிரகாஷிடம் முத்தழகு தெரிவித்தார்.

இது தொடர்பாக முத்தழகும், பிரகாஷும் செல்போனில் பேசும் 3 உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அந்த உரையாடலில், ‘தனக்கு ரூ.5 லட்சம் என்பது ஒரு நாள் டீ அருந்தும் பணம்தான்’ என முத்தழகு மிரட்டும் தொனியில் பேசியிருந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து முத்தழகு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர் ஆவடி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதன் பிறகு அவர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அண்ணாநகர் உதவி கமிஷனர் குடியிருப்பில் உள்ள முத்தழகு வீட்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. தலைமையில் சுமார் 6-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை 7 மணிக்கு சோதனையை தொடங்கினார்கள். நண்பகல் 12.30-க்கு சோதனை நிறைவடைந்தது.

இந்த சோதனையின்போது முத்தழகு வீட்டில்தான் இருந்தார். அவரை வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. சோதனையின்போது முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அப்போது அவர், வீட்டில் இருந்து முக்கிய தகவல்கள் அடங்கிய ‘ஹார்டு டிஸ்க்’ மற்றும் பிரிண்டர் எந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈடுபட்டனர். மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக முத்தழகுவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Next Story