ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது: குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்


ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது: குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 8:06 PM GMT)

ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் வெறிச்சோடி கிடந்தன.

நாகர்கோவில்,

1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்ய கூடாது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

குமரி மாவட்டத்திலும் ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கங்கள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசு பணியாளர் சங்கம், வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் வருவாய்த்துறை மூலம் நடைபெறும் சான்றிதழ் வழங்கும் பணிகள், ஊரக வளர்ச்சித்துறை பணிகள், பேரூராட்சி பணிகள், கல்வித்துறை பணிகள் என பல்வேறு துறைகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.

பல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத நிலை இருந்தது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன.

போராட்டத்தையொட்டி நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ- ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வினித், வேலவன், கோலப்பன், சுமதி, சிவஸ்ரீரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பகவதியப்ப பிள்ளை நிறைவுரையாற்றினார். முடிவில் எட்வின் பிரகாஷ் நன்றி கூறினார்.

இதேபோல் தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மரியமிக்கேல், ஜாண் இக்னேஷியஸ், கனகராஜ், பெனின் தேவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். குழித்துறையில் விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதீப்குமார், ஜாண் கிறிஸ்டோபர், கோவிந்தன்குட்டி, சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறும்போது, எங்களது அமைப்பின் சார்பில் குமரி மாவட்டம் முழுவதும் நடந்த முதல்நாள் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறை பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில இடங்களில் பள்ளிகள் பூட்டப்பட்டு கிடந்தன. அதேபோல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் பெருமளவு ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை என்றார்.

2-வது நாளான இன்று (புதன்கிழமை) நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம், தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம், குழித்துறையில் விளவங்கோடு தாலுகா அலுவலகம் ஆகியவற்றின் முன் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. நாளையும் (வியாழக்கிழமை) இதே அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடக்கிறது. 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாகர்கோவில் கலெக்டர் அலவலகம் முன் மறியல் போராட்டம் நடக்க இருக்கிறது என்று ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story