தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக புகார், சாலை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
பழனி அருகே தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
கீரனூர்,
பழனி அருகே உள்ள தொப்பம்பட்டியில் இருந்து மரிச்சிலம்பு கிராமம் வரை 4 கி.மீ. தூர தார்சாலை உள்ளது. இந்த தார்சாலை குண்டும், குழியுமாக காட்சியளித்தது. கற்கள் பெயர்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் ஒன்றிய நிர்வாகம் சார்பில் அந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக எந்திரம் மூலம் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதற்கிடையில் தொப்பம்பட்டியில் இருந்து மார்க்கண்டாபுரம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டது.
இதில் மேலோட்டமாக தார் கலவையை கொட்டி சாலை அமைத்ததாக கூறப் படுகிறது. சாலை அமைத்த சில மணி நேரத்திலேயே பெயர்ந்து வந்தது. இதையறிந்த மார்க்கண்டாபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர். தரமற்ற முறையில் அமைப்பதாக கூறி சாலை பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலை அமைக்கும் பணியை கைவிட்டு ஊழியர்கள் சென்றனர்.
இதற்கிடையே தகவல் அறிந்ததும் தொப்பம்பட்டி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தரமான முறையில் சாலை அமைத்து தருவதாக உறுதி கூறினர். மேலும் தரமான முறையில் சாலை அமைக்காவிடில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story