பிப்ரவரி 2-வது வாரத்துக்குள் சீர்மரபினர் சாதிச்சான்றிதழ் மாற்றுவது குறித்து அறிக்கை தாக்கல்


பிப்ரவரி 2-வது வாரத்துக்குள் சீர்மரபினர் சாதிச்சான்றிதழ் மாற்றுவது குறித்து அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:45 PM GMT (Updated: 22 Jan 2019 9:34 PM GMT)

சீர்மரபினர் சாதிச்சான்றிதழ் மாற்றுவது குறித்து பிப்ரவரி 2-வது வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக அரசு முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்தார்.

தேனி,

தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் உள்ள 68 சமுதாயத்தினருக்கு சீர்மரபினர் சமுதாயம் (டி.என்.சி.) என்று சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களுக்கு சீர்மரபினர் பழங்குடியினர் (டி.என்.டி.) என பெயர் மாற்றம் செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து டி.என்.சி. சான்றிதழை டி.என்.டி. என்று மாற்றுவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர் தலைமையில் குழுவை அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவின் தலைவராக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவினர் தேனிக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த குழுவின் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தலைமை தாங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் அரசு செயலாளர் கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் மதிவாணன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குனர் சம்பத், வருவாய் நிர்வாக இணை ஆணையாளர் லட்சுமி, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் பேசும் போது, ‘சீர்மரபினர் மக்களுக்கு மீண்டும் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும். இலவச உயர்கல்வி வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும். சீர்மரபினர் நலவாரிய திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ரெங்கி ஆணையம் 76 பரிந்துரைகளை மற்றும் பிகுராம்ஜி ஆணையத்தின் இடைக்கால பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்து, இதுதொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்வதாக முதன்மை செயலாளர் தலைமையிலான குழுவினர் உறுதி அளித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்தியநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) தினேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிப்ரவரியில் அறிக்கை

கூட்டத்தை தொடர்ந்து முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1979-ம் ஆண்டு டி.என்.டி. என்பதில் இருந்து டி.என்.சி. என்று சாதிச்சான்றிதழ் மாற்றப்பட்டபோது எந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்தன? இவ்வாறு மாற்றப்பட்டதால் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்காமல் போனது? என்பது குறித்தும், மீண்டும் டி.என்.டி. சாதிச்சான்றிதழ் மாற்றுவதற்கு சட்டரீதியாக என்ன செய்வது? அதற்கு எந்த வகையில் வாய்ப்புகள் உள்ளன? என்பது குறித்தும் விரிவாக ஆராய்வதே இந்த குழுவின் நோக்கம். இதற்காக சென்னையில் சீர்மரபினர் சமுதாய தலைவர்களுடன் ஒரு கூட்டம் நடத்தினோம். அண்ணா பல்கலைக்கழகம், டி.என்.பி.எஸ்.சி., மருத்துவ பல்கலைக்கழகங்களில் எவ்வளவு பேர் பயன் பெற்றுள்ளனர் என்பது குறித்த புள்ளி விவரங்கள் வாங்கி உள்ளோம்.

இதுகுறித்த விரிவான அறிக்கையை தயார் செய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளோம். பிப்ரவரி மாதம் முதல் வாரம் அல்லது 2-வது வாரத்துக்குள் முதல்-அமைச்சரிடம் இந்த குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதுவரை நடத்தியுள்ள இக்குழுவின் கூட்டங்களில் ஏராளமான ஆவணங்களை கொடுத்துள்ளனர். இந்த மக்களுக்கு எது சிறந்ததோ அதை செய்வோம் என்று உறுதி அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பெரியகுளம் பகுதியில் உள்ள கள்ளர் அரசு மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் எ.புதுப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளி ஆகிய இடங் களில் முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மாணவ, மாணவி களிடம் பள்ளி மற்றும் விடுதி களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்த ஆய்வின் போது வருவாய்த்துறை அதி காரிகள் உடனிருந்தனர். 

Next Story