சாத்தான்குளம்-கயத்தாறு பகுதியில் வீடுகளில் குடிநீர் இணைப்பில் முறைகேடு; 37 மின் மோட்டார்கள் பறிமுதல்


சாத்தான்குளம்-கயத்தாறு பகுதியில் வீடுகளில் குடிநீர் இணைப்பில் முறைகேடு; 37 மின் மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:30 AM IST (Updated: 23 Jan 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம், கயத்தாறு பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் முறைகேடாக பொருத்தப்பட்டு இருந்த 37 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் நகர பஞ்சாயத்து பகுதியில் நேற்று காலையில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் நாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் உள்ளிட்ட குழுவினர், வீடு வீடாக சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 20 வீடுகளில் முறைகேடாக குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சியது கண்டறியப்பட்டது. இதையடுத்து 20 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த வீட்டு குடிநீர் இணைப்புகளை நிரந்தரமாக துண்டித்தனர்.

இதேபோன்று கயத்தாறு நகர பஞ்சாயத்து பகுதியில் நேற்று குடிநீர் வினியோகம் செய்தபோது, நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் (பொறுப்பு) கணேசன், சுகாதார மேற்பார்வையாளர் செல்லத்துரை உள்ளிட்ட குழுவினர் வீடு வீடாக சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 15 வீடுகளில் முறைகேடாக குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சியது கண்டறியப்பட்டது. எனவே 15 மின் மோட்டார்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த வீட்டு குடிநீர் இணைப்புகளை நிரந்தரமாக துண்டித்தனர்.

இதேபோன்று எட்டயபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் வினியோகம் செய்தபோது, நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் உஷா, சுகாதார ஆய்வாளர் பூவையா உள்ளிட்ட குழுவினர் வீடு வீடாக சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீடுகளில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 2 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த குடிநீர் இணைப்புகளை நிரந்தரமாக துண்டித்தனர்.

Next Story