மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:50 PM GMT (Updated: 22 Jan 2019 10:50 PM GMT)

மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் முற்றுகையிட்டனர்.

மேலூர்,

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். ஆனால் அப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்தநிலையில் தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்று கூறி, கைவிடப்பட்ட தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க இருப்பதாக ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தாலுகா அளவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் ராஜூ, பாலகிருஷ்ணன், சோலைராஜா, கிருபாகரன், கிறிஸ்டோபர், நாகராஜன், சிவக்குமார், ஜேசுதாஸ், சாலமன், வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பட்டதாரிகள் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளை தலைவர் சின்னப்பொண்ணு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட செயலாளர் பொற்செல்வம், ஜாக்டோ–ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் முருகன் உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் திருமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதற்கிடையே கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


Next Story