கள்ளக்குறிச்சியை மாவட்டமாக அறிவித்து மக்களின் கனவை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சியை மாவட்டமாக அறிவித்து இப்பகுதி மக்களின் கனவை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.
கள்ளக்குறிச்சி,
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., மாநில மகளிரணி துணை செயலாளர் சத்யா பன்னீர்செல்வம், தலைமை கழக பேச்சாளர் தர்மராஜன், காமராஜ் எம்.பி., மாவட்ட மகளிரணி தலைவி அழகுவேல் பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நானும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் கோரிக்கை வைத்தோம். மேலும் கடந்த 5-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் கள்ளக்குறிச்சியை மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். இதையடுத்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று விட்டு, கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்று விட்டார். அவர் கள்ளக்குறிச்சியை மாவட்டமாக அறிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி சொல்லாமல், டி.டி.வி.தினகரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியை மாவட்டமாக அறிவித்து இப்பகுதி மக்களின் கனவை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.
இதில் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், மாவட்ட மருத்துவரணி பொருளாளர் டாக்டர் குமரேசன், மாவட்ட ஜெய லலிதா பேரவை முன்னாள் தலைவர் ஞானவேல், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தங்கபாண்டியன், இணைச்செயலாளர்கள் ரங்கன், செல்வராஜ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் குபேந்திரன், நகர பொருளாளர் சுரேஷ்குமார், கூட்டுறவு சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச்செயலாளர் அத்தியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணைச்செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story