நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் தரவில்லை: வைகை ஆற்றில் அதிகாரிகள் துணையோடு மணல் திருட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விவசாயிகளுக்கு பணம் தர வில்லை என்றும், வைகை ஆற்றில் அதிகாரிகள் துணையோடு மணல் திருட்டு நடந்து வருவதாகவும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
விவசாயி ஒருவர் பேசும்போது, மதுரை வைகை ஆற்றில் தினமும் மணல் கொள்ளை அரங்கேறி கொண்டு இருக்கிறது. ஆற்றை காப்போம் என்று கூறி விட்டு மணலை திருடி கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக குருவித்துறையில் இருந்து மேலக்கால் வரை உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் அதிகாரிகளின் துணையோடு மணல் திருட்டு நடக்கிறது என்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சில விவசாயிகள் எழுந்து நின்று கடும் கோஷம் எழுப்பினர். ஆனால் விவசாயியின் இந்த பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து சில விவசாயிகள் எழுந்து நின்று மணல் கொள்ளை நடப்பது நிஜம் தான். பட்டா இடத்தில் மணல் அள்ளுவதற்கு அனுமதி பெற்று, ஆற்றில் மணல் எடுக்கின்றனர். எனவே இதனை தடுத்து வைகை ஆறு வளத்தை காக்க வேண்டும் என்றனர். இருதரப்பு விவசாயிகளும் தொடர்ந்து பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
உடனே கலெக்டர் தலையிட்டு அமைதிப்படுத்தி பேசினார். அப்போது அவர், ‘‘ஆற்றில் மணல் எடுக்க யாருக்கும் அனுமதி கிடையாது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என்றார்.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:–
மதுரை மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எங்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. ஆனால் நெல் கொள்முதல் நிலையத்தில் எங்களிடம் 1 மூடைக்கு ரூ.45 வாங்குகிறார்கள். எதற்கு எங்களிடம் இருந்து பணம் வாங்குகிறார்கள். எங்களிடம் இருந்து பணம் வாங்க சொல்லி அரசு உத்தரவு ஏதும் இருக்கிறதா?. எனவே நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதற்கு விசாரணை கமிட்டி ஒன்றும் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
ஆனால் இந்த கேள்விக்கு அங்கிருந்த நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர், இதுகுறித்து விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.
தொடர்ந்து விவசாயிகள் பேசும் போது, வைகை அணையில் இருந்து விவசாயித்திற்கு 120 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் 80 நாட்கள் தான் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகி வருகிறது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட நீர் பாசன விவசாயிகள் சங்கத்திற்கு கடந்த 2015–ம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தவில்லை. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.70 வீதம் மொத்தம் விவசாயிகளிடம் இருந்து ரூ.2 கோடியே 70 ல்ட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகை எங்கு இருக்கிறது என்பதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்த பேசிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியம், இருக்கும் நீரை பகிர்ந்து அளித்து வருகிறோம். சங்க தேர்தல் குறித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தன.