ஆசிரியர்களின் போராட்டத்தினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வேதனை


ஆசிரியர்களின் போராட்டத்தினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வேதனை
x
தினத்தந்தி 23 Jan 2019 12:45 AM GMT (Updated: 23 Jan 2019 12:22 AM GMT)

சொசைட்டி கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அன்பழகன் எம்.எல்.ஏ. வேதனையுடன் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை ஆட்சியாளர்கள் மிக முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பே வெளியிடப்படாத நிலையில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் பல பிரச்சினைகள் பூதாகரமாக உருவாகியுள்ளன. சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டிய 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை இந்த அரசு உள்நோக்கத்துடன் நிதி நெருக்கடி என்ற பொய்யான காரணத்தை காட்டி அமலாக்கவில்லை.

இதனால் சொசைட்டியின் கீழ் பணியாற்றும் கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் ஒரே மாதிரியான விதிமுறையின் கீழ்தான் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் சில அரசு கல்லூரிகள் சொசைட்டி கல்லூரிகளாகவும் மாற்றப்படுகின்றன. இத்தகைய கல்லூரிகளுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட வேண்டிய 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த கடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவினையும் அமல்படுத்துவார்களா? என்று தெரியவில்லை. குறிப்பாக அமைச்சரவை முடிவினை கவர்னர் ஏற்பரா? என்று தெரியவில்லை.

இந்த முடிவினை மார்ச் 1–ந்தேதிக்குள் அமல்படுத்தினால் 50 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குவதாக தெரிகிறது. எனவே உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தக்கோரி சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

மனித உயிர் சம்பந்தமான பிரச்சினைகளில் சுகாதாரத்துறையின் செயல்பாடு மிக மெத்தனமாக உள்ளது. அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. குறிப்பாக காரைக்காலில் இது அதிகமாக உள்ளது. புதுவையில் 2 ஆயிரத்து 700 பணியிடங்களில் 1,125 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் நோயாளிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. கடந்த வாரம் எனது தொகுதியை சேர்ந்த ஒருவர் சரியான பராமரிப்பு இல்லாததால் இறந்துவிட்டார்.

அரசு ஆஸ்பத்திரியில் 3 முறை ஆய்வு நடத்திய கவர்னர் அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன? முதல்–அமைச்சர் மாதந்தோறும் துறை சம்பந்தமான ஆய்வு கூட்டத்தையும், கவர்னர் துறைகளுக்கே சென்று ஆய்வையும் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசுத்துறைகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

கடந்த கால என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கடன் பெற்று கொடுத்த நிதித்துறை செயலாளர் இப்போது அக்கடன்களை அடைக்க தீவிரம் காட்டி வருகிறார். மக்களுக்கு தேவையான பணிகளை செய்யாமல் கடன்களை அடைப்பது தவறானது. புதிய தொழிற்கொள்கை கொண்டு வந்த பின்னர் 200–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அ.தி.மு.க. தலைமை தேர்தல் போட்டி குறித்து அறிவிப்பு வெளியிடும். தமிழக கூட்டணியே புதுச்சேரியிலும் நீடிக்கும். புதுவையில் அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துவோம். புதுவையில் தோல்விபயம் ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் புதுவை தொகுதியை தி.மு.க.விற்கு விட்டு கொடுக்க முன்வந்துள்ளது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story