வானவில் : புகை மாசிலிருந்து காக்கும் முகமூடி


வானவில் : புகை மாசிலிருந்து காக்கும் முகமூடி
x
தினத்தந்தி 23 Jan 2019 10:31 AM GMT (Updated: 23 Jan 2019 10:31 AM GMT)

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவின் ஜியோமி (ஷாமி என்றும் உச்சரிக்கின்றனர்) நிறுவனம் புகை மாசிலிருந்து உங்களைக் காக்கும் முகமூடியை அறிமுகம் செய்துள்ளது.

நான்கு அடுக்கு வடிகட்டியைக் கொண்டுள்ளதால் இது காற்று மாசிலிருந்து முழுமையாக உங்களைக் காக்கும். இது எம்.ஐ. இணையதளத்தில் கிடைக்கிறது. விலை ரூ.249. இது காற்று மாசுவை 99 சதவீத அளவுக்கு வடிகட்டிவிடும்.

இது முகத்தில் எவ்வித அலர்ஜியையும் ஏற்படுத்தாத சிறந்த துணியால் உருவாக்கப்பட்டது. 3டி டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பாக்கெட்டில் இரண்டு முகக் கவசம் இருக்கும். புழுதிக் காற்று, ஜலதோஷம், புளூ, ஒவ்வாமை, புகை உள்ளிட்ட காற்று மாசிலிருந்து உங்களை இது காக்கும்.

இதில் உள்ள முதல் அடுக்கு காற்றில் உள்ள பெரிய அளவிலான தூசுக்களை வடிகட்டும். இதில் உள்ள அடுத்தடுத்த வடிகட்டிகள் (மைக்ரோ பில்டர்) 0.3 மைக்ரோ மீட்டர் அளவு கொண்டது. இது முப்பரிமாண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர இதில் உள்ள தண்ணீர் உறிஞ்சும் வடிகட்டி, உங்களது மூச்சுக் காற்றை ஆவியாகி உங்கள் முகத்தில் படர்வதைத் தடுக்கும். இதில் உள்ள 3 டி ஸ்பாஞ்ச் உங்கள் முகத்துக்கேற்ப சரிவர பொருந்தும் வகையில் தன்னை சரிசெய்து கொள்ளும்.

பொதுவாக புழக்கத்தில் உள்ள காற்று முகமூடிகளில் மூக்கின் மீது அழுத்தக்கூடிய நோஸ் பார் பெரும்பாலும் உலோகத்தால் ஆனதாக உள்ளது. ஆனால் இதில் அவ்வித உலோக பாகம் எதுவும் கிடையாது. இதனால் முகத்தில் எவ்வித அழுத்தமும் தராது.

அதேபோல இதை நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் பிரச்சினை ஏற்படாது. எளிதில் மடித்து எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

Next Story