அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம் 1,803 பெண்கள் உள்பட 3,170 பேர் கைது


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம் 1,803 பெண்கள் உள்பட 3,170 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2019 10:30 PM GMT (Updated: 23 Jan 2019 1:32 PM GMT)

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ– ஜியோ அமைப்பு சார்பில் நேற்று 2–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 1,803 பெண்கள் உள்பட 3,170 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர், 

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்நாளான நேற்று முன்தினம் தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2–வது நாளான நேற்று தாலுகா தலை நகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகா தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது.

வேலூரில் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தை முன்னிட்டு துணைபோலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஜாக்டோ அமைப்பை சேர்ந்த பாஸ்கரன், ஜியோ அமைப்பை சேர்ந்த மாரிமுத்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த இமானுவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தொடர்ந்து அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்து திருமணமண்டபத்தில் தங்கவைத்தனர். 300 பெண்கள் உள்பட 400 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதேபோன்று மாவட்டத்தில் 13 இடங்களிலும் நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 1,803 பெண்கள் உள்பட 3,170 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

2–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது.


Next Story