போலீஸ் அதிகாரி போல் நடித்து பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த வாலிபர் கைது


போலீஸ் அதிகாரி போல் நடித்து பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2019 11:00 PM GMT (Updated: 23 Jan 2019 5:41 PM GMT)

போலீஸ் அதிகாரி போல் நடித்து பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மைசூரு, 

மைசூரு சாந்திநகரை சேர்ந்தவர் நாராயணகவுடா. இவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீஸ் அதிகாரி சீருடை அணிந்து ஒருவர் வந்தார். அவர் தான், பெங்களூருவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறேன். பெங்களூருவில் உள்ள மதுபான விடுதியில் உங்கள் மகன் ரேணுகா கவுடா காசாளராக வேலை பார்த்து வருகிறார். அவர், பெங்களூருவில் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டார். தற்போது உங்கள் மகன் தலைமறைவாக உள்ளார். உங்கள் மகன் கிடைக்கும் வரை நீங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு நாராயணகவுடா அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இதனை நம்பிய நாராயணகவுடா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தனக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தால், உங்கள் மகன் மீதான வழக்கை ரத்து செய்வதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இதற்கு அவர்கள் சம்மதித்துள்ளனர். முதல்கட்டமாக ரூ.5 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை ஏ.டி.எம்.மில் எடுத்து தருவதாக தெரிவித்தனர். அதற்கு அந்த நபர் ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில் நாராயணகவுடா, ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது, அந்த நபர் மீது நாராயணகவுடாவுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர் உதயகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உதயகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உதயகிரி போலீசார், போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பெங்களூருவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருவதாக மீண்டும் தெரிவித்தார்.

ஆனால் அவருடைய நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உதயகிரி போலீசார், அவருடைய அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர் தான் வைத்திருந்த அடையாள அட்டையை காண்பித்தார். அது போலியான அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து உதயகிரி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த நபர் ஹாவேரி மாவட்டம் சிக்காம் கிராமத்தை சேர்ந்த சித்தப்பா சென்னபசப்பா (வயது 28) என்பதும், அவர் பெங்களூருவில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் தான் போலீஸ் அதிகாரி என கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்துகொண்டனர். இதுகுறித்து உதயகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story