தஞ்சை ரெயில் நிலையத்தில் மீண்டும் பூட்டப்பட்ட டிக்கெட் வழங்கும் மையம் பயணிகள் ஏமாற்றம்


தஞ்சை ரெயில் நிலையத்தில் மீண்டும் பூட்டப்பட்ட டிக்கெட் வழங்கும் மையம் பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 23 Jan 2019 10:45 PM GMT (Updated: 23 Jan 2019 7:10 PM GMT)

தஞ்சை ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் மையம் மீண்டும் பூட்டப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையம் ஆகும். முன்பு தஞ்சை வழியாக செல்லும் ரெயில் பாதை தான் முக்கியமான ரெயில்பாதையாக இருந்துள்ளது. இந்த வழியாகத்தான் சென்னைக்கும், தென்மாவட்டங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. திருச்சி- விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான ரெயில்கள் அந்த வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தஞ்சை வழியாக சென்னை, ராமேசுவரம், கோவை, எர்ணாகுளம், திருநெல்வேலி, புதுச்சேரி, கன்னியாகுமரி, மதுரை, மைசூர், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை ரெயில் நிலையத்துக்கு முன்பக்கம் வழியாகவும், பின்பக்கம் மேரீஸ்கார்னர் வழியாகவும் வந்து செல்லலாம். முன்பகுதியில் 2 டிக்கெட் முன்பதிவு மையங்களும், தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு தனியாக மையமும் உள்ளன. இது தவிர முன்பதிவில்லா டிக்கெட் எடுப்பதற்கு தனியாக 2 மையமும், குறிப்பிட்ட தொலைவில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெறுவதற்காக 2 தானியங்கி எந்திரங்களும் உள்ளன.

பின்பகுதியில் 1 டிக்கெட் மையம் உள்ளது. இங்கு முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. மேலும் இந்த பகுதியில் இருசக்கர வாகனம், கார் நிறுத்துமிடம் போன்றவையும் உள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் தங்களது வாகனத்தை இங்கு நிறுத்தி விட்டு டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயிலில் பயணம் செய்வதற்கு வசதியாக இருந்தது.

தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்பட்டு வந்த இந்த டிக்கெட் வழங்கும் மையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மூடப்பட்டது. ஆள் பற்றாக்குறை காரணமாக இந்த மையம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து “தினத்தந்தி” நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இந்த மையம் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்த இந்த மையம் தற்போது மீண்டும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் எடுப்பதற்காக வரும் பயணிகள் ஏமாற்றம் அடை கின்றனர். பின்பகுதி வழியாக வரும் பயணிகள் ரெயில் நிலைய நடைமேடைகளை கடந்து முன்பகுதிக்கு வந்து பின்னர் டிக்கெட் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. முன்பகுதியில் சில நேரங்களில் கூட்டமாக இருக்கும் போது பயணிகள் ரெயிலை தவறவிடும் நிலையும் உள்ளது.

சில நேரங்களில் ரெயிலில் பயணிகளை ஏற்றி விட பின்வாசல் வழியாக வருபவர்கள் டிக்கெட் வழங்கும் மையம் மூடிக்கிடப்பதால் பிளாட்பார டிக்கெட் எடுக்க முடியாமல் முன்பகுதிக்கு வரும் வழியில், அதிகாரிகள் அவர்களை மறித்து பிளாட்பார டிக்கெட் எடுக்காததற்கு அபராதம் விதிக்கிறார்கள். இதனால் சில நேரங்களில் பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த மையம் காலை, மாலை நேரங்களில் மட்டும் திறக்கப்படுகிறது. ஆனால் அது குறித்த எந்த அறிவிப்பும் இந்த மையத்தின் முன்போ, பக்கவாட்டிலோ இல்லை. டிக்கெட் வழங்கும் மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story