நெல் அறுவடை எந்திரங்களின் வாடகை உயர்வால் விவசாயிகள் கலக்கம் கடந்த ஆண்டை விட ரூ.700 வரை கூடுதலாக வசூல்


நெல் அறுவடை எந்திரங்களின் வாடகை உயர்வால் விவசாயிகள் கலக்கம் கடந்த ஆண்டை விட ரூ.700 வரை கூடுதலாக வசூல்
x
தினத்தந்தி 24 Jan 2019 4:15 AM IST (Updated: 24 Jan 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

நெல் அறுவடை எந்திரங்களின் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டை விட ரூ.700 வரை கூடுதலாக வசூலிப்பதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாக ஜூலை மாதம் 19-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 4½ லட்சம் எக்டேர் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, தஞ்சை, திருவையாறு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நெல் அறுவடை தொடங்கியதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை எந்திரங்கள் அதிக அளவில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. குறிப்பாக சேலம், சின்னசேலம், ஆத்தூர், நாமக்கல், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து அதிக நெல் அறுவடை செய்யும் எந்திரங்கள் வந்துள்ளன. பெரிய, சிறிய அளவில் என 2 விதமாக அறுவடை எந்திரங்கள் வந்துள்ளன.

இது தவிர வேளாண்மை பொறியியல் துறை சார்பிலும் நெல் அறுவடை செய்யும் எந்திரங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விடப்பட்டுள்ள சிறிய அறுவடை எந்திரங்களுக்கு மணிக்கு ரூ.875-ம், பெரிய அறுவடை எந்திரங்களுக்கு ரூ.1,415-ம் என வாடகை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள், மணிக்கு சிறிய எந்திரங்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,200 வரையும், பெரிய அறுவடை எந்திரங்களுக்கு ரூ.2,500 வரையும் வசூலிக்கிறார்கள். கடந்த ஆண்டு ரூ.1,800 வசூலித்தனர். தற்போது ரூ.700 வரை கூடுதலாக வசூலிக்கிறார்கள். அரசு எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய வேண்டும் என்றால் அது முடியாத காரியம் என்பதால் விவசாயிகள் தனியார் அறுவடை எந்திரங்களை நாடுகிறார்கள். ஆனால் அதற்கான வாடகை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

ஏற்கனவே கஜா புயலின் தாக்கத்தில் மகசூல் பாதியாக குறைந்துள்ள நிலையில், அறுவடைக்கான கட்டணமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். அதுவும் 1 மணி நேரத்தில் அறுவடை செய்யும் இடம், ஈரப்பதமாக இருந்தால் 1½ மணி நேரம் ஆகிறது. இதனால் 1 ஏக்கருக்கு ரூ.3,300 வரை கட்டணம் கொடுக்க வேண்டி உள்ளது.

ஆனால் டீசல் உயர்வு, டிரைவருக்கான கூலி, வாகன பராமரிப்பு செலவு உயர்ந்துள்ளதால் வாடகையும் உயர்த்த வேண்டி உள்ளதாக அறுவடை எந்திரங்களை இயக்குபவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில், “வேளாண்மை பொறியியல் துறை சார்பில் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மேலும் தேவைப்பட்டால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் எந்திரங்கள் வரவழைக்கப் படும்.

தனியார் எந்திரங்கள் வாடகை அதிகமாக வசூலிக்கப்படுகிறது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள், அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்களை அழைத்து பேசி ஓரிரு நாட்களில் கட்டணம் நிர்ணயிக்கப் படும்” என்றனர்.

Next Story