அரியலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சாலை மறியல் 1,413 பேர் கைது


அரியலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சாலை மறியல் 1,413 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 24 Jan 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 1,413 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்,

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.

21 மாத நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தின் முதற்கட்டமாக நேற்று முன்தினம் அரியலூர், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம் நடத்துவதற்காக அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று காலை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் ஆசிரியர் நீதிபதி தலைமையில் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அரியலூர் பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 277 பெண்கள் உள்பட 477 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, செந்துறை போலீஸ் நிலையம் அருகே தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 184 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நம்பிராஜ் தலைமையில் நடந்த மறியல் பேராட்டத்தில் ஈடுபட்ட 196 பெண்கள் உள்பட 500 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆண்டிமடம் வட்டார தலைவர் வரதராசன். தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 136 பெண்கள் உள்பட 252 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலை நிறுத்த போராட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அந்த பள்ளிகள் செயல்படுவதற்கு மாவட்ட பள்ளிக்கல்வி துறை மூலம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 1,413 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.

Next Story