அ.தி.மு.க.வுடன் மீண்டும் இணைய வாய்ப்பில்லை திருச்சியில் டி.டி.வி. தினகரன் பேட்டி


அ.தி.மு.க.வுடன் மீண்டும் இணைய வாய்ப்பில்லை திருச்சியில் டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2019 11:15 PM GMT (Updated: 23 Jan 2019 7:40 PM GMT)

அ.தி.மு.க.வுடன் நாங்கள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்று திருச்சியில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

திருச்சி,

அ.தி.மு.க.வுடன் நாங்கள் மீண்டும் இணைய மாட்டோம். இந்த துரோக சக்திகளிடம் இருந்து விலகி வந்து விட்டோம். ஒவ்வொரு தொகுதியிலும் 3 ஆயிரம் நிர்வாகிகளை நியமித்துவிட்டோம். எங்கள் கட்சிக்கு ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே அவர்களிடம் மீண்டும் சேர வாய்ப்பில்லை.

அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை. மத்திய மந்திரி அத்வாலே அவருடைய ஆசையை கூறி உள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவினை மோடி தான் நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து ஏற்று கொள்ள முடியாதது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் உள்ள ஏழை, எளியவர்கள், வியாபாரிகள், நெசவாளர்கள், விவசாயிகள் என பல தரப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டனர்.

ஆனால் ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களையும் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வர முயற்சிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு எதிரான 8 வழிச்சாலை திட்டம் என பல திட்டங்களை கொண்டு வருகிறார்கள். அதனால் மோடி எப்படி? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றி வருகிறார் என்று கூற முடியும்.

எங்களது ஒரே குறிக்கோள் துரோகிகள் கைகளில் சிக்கி விட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துகளை தம்பிதுரை கூறி வருவது நாடகம். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் அவர் அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கிறார். ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story