திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஏன்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஏன்? என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் மதிப்பனூரை சேர்ந்த தாமோதரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மதுரை,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்த திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மாதம் 31-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கிடையே கஜா புயல் நிவாரண பணிகள் நிறைவடையாததால் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தின் அடிப்படையில் திடீரென கடந்த 6-ந்தேதி திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை.
இடைத்தேர்தல் நடத்துவதற்காக மத்திய அரசிடம் இருந்து கருத்து கேட்டு, அதன்பின் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல தேர்தலை ரத்து செய்வதற்கும் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைகளை செய்யாமல் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்காக, தேர்தல் ரத்து நடவடிக்கையை தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொண்டு உள்ளார். இது சட்டவிரோதம்.
எனவே, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்தது குறித்த தேர்தல் ஆணையரின் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். அந்த அறிவிப்பு செல்லாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆனந்தமுருகன் ஆஜராகி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு சட்டசபை தொகுதி காலியான 6 மாதத்துக்குள் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதை ரத்து செய்ய தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே இடைத்தேர்தல் ரத்து நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்தது தொடர்பாக மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story